பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

265

என்னுடைய உப்பைத் தின்பவர்கள் என்னைப் போலவே இஸ்லாத்திற்குப் பணி செய்பவர்களாக இருக்க வேண்டும். இஸ்லாத்தின் விரோதிகள் என் முகத்திலே விழிக்கக் கூடாது” என்று சொல்லிக் கதவை நோக்கி கையைக்காட்டினார். உமார் எழுந்து, திரும்பிச் சென்றான். அவன் கதவின் அருகில் செல்லும்போது, நிசாம். ஏதோ சொல்வது போலிருந்தது. ஆனால் அவர் அவனைத் திரும்ப வரும்படி கூப்பிடவில்லை. தொழுகை விரிப்பின்மேல் மண்டியிட்டு மெக்காவை நோக்கித் திரும்பி, அல்லாவின் பெயர்கள் அத்தனையையும் கூறித் தொழுது கொண்டிருந்தார்.

“சாந்தி உண்டாகட்டும்” என்று கூறிக் கொண்டே உமார் வெளியேறினான்.

தன் வாழ்வுப் பாதைக்கு வழியாயிருந்த மற்றொரு கதவும் முடிக்கொண்டதை உமார் உணர்ந்தான். மீண்டும் திறக்க முடியாதபடி அந்தக் கதவு முடிக் கொண்டு விட்டது.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே கவனிக்காமல் நாற்சந்தி வழியாக நடந்து கொண்டிருந்தான் உமார். அவனுக்கருகிலே ஒரு மனிதன் கூப்பாடு போட்டான். திடுமென்று ஏற்பட்ட அந்தக் குழப்பத்தில் உடல்கள் உருண்டன. வளைந்த வாள்களின் ஒளி வெயிலில் தகதகத்தது. “மூலாஹித்துக்கள்! மத மறுப்புக்காரர்கள்!அடி, கொல்லு!” குரல்கள் கூக்குரலிட்டன. வெள்ளையங்கியும், சிவப்புக் கால்சட்டையும் அணிந்திருந்த ஓர் உருவம் தன் எதிரிலே வீரர்களின் மத்தியிலே சிக்கிக் கொண்டிருப்பதையும், அந்த மனிதனின் கழுத்திலேயிருந்து ரத்தம் பொங்கி வழிவதையும், வலையில் பிடிபட்ட மிருகம் போல அவன் வாய் திறந்து மூச்சுத் திணறிக் கொண்டிருப்பதையும் கண்டான்.

ஒரு கை அவன் முகத்தை நோக்கி வந்தது. விரல்கள் முக்கைப்பிடித்து ஆட்டிப் பின்னுக்குத் தள்ளின. வளைந்த கத்தியொன்று மறுபடியும் அவன் கழுத்தில் பாய்ந்து தலையை வேறுபடுத்தியது. துண்டுபட்ட அந்தத் தலை எல்லோருக்கும் தெரியும்படி உயரத்தில் தூக்கிக் காண்பிக்கப்பேட்டது.