பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

267

பின்னுக்கு இழுத்தன. “வந்துவிடு அல்லது உன்னுடைய உயிரும் பறிக்கப்பட்டுவிடும், விரைவில் வா” என்று அக்ரோனோஸ் அவன் காதுக்குள்ளே சொல்லிக்கொண்டிருந்தான். இதற்குள் அந்தப் பையன் வயிற்றிலே பலமுறை குத்தப்பட்டு, அவனுடைய அழுகுரல் படிப்படியாகக் குறைந்துபோயிருந்தது. அக்ரோனோஸ் அவனை இழுத்துக் கொண்டே, மெதுவாக நடந்து கொண்டே “என்னிடம் வியாபார விஷயமாகப் பேசுவதாக நடித்துக் கொண்டு வா” என்றான்.

உமாருக்கு, நாற்சந்தியிலே நடக்கும் குழப்பத்தைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அங்கு மிங்கும் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இடையே குதிரையின்மேல் அசையாமல் உட்கார்ந்திருந்த ஒரு பருத்த மனிதனைக் கவனித்தான்.

அவ்வளவு தூரத்தில் இருந்தும் கூட, நீலத் தலைப்பாகையுடன் இருந்த நிசாமின் ஒற்றர் தலைவன் டுன்டுஷ் அவன் என்பதை உமார் அறிந்து கொண்டான். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சந்திலே தான் நிற்பதை உமார் கண்டான். அவனுக்கு எதிரே சற்று தூரத்தில், ஒரு குயவன் சக்கரத்தில் பானைகள் செய்து கொண்டிருந்தான். மீண்டும், மீண்டும், தன் கைகளுக்கிடையே இருந்த களிமண்ணுக்கு அந்தக் குயவன் உயிர் கொடுத்துப் பாண்டமாக உருவாக்கிக் கொண்டிருந்தான்.

ஆனால், அந்த நாற்சந்தியிலே மனிதப் பாண்டங்களை ஒளிவீசும் உருக்குக் கத்திகள் உடைத்துக் கொண்டிருப்பதையும் புழுதி மண்ணிலே குருதி விழுந்து கலப்பதையும் உமார் கண்டான்.

“என்னோடு, மெதுவாக நடந்து வாருங்கள் ஒற்றர் தலைவன் நம்மைத் தொடர்ந்து வருகிறான்” என்று அக்ரோனோஸ் கூறினான்.

அவர்களுக்குப் பின்னாலே ஒரு குதிரை, மேலே போகாமல், சண்டித்தனம் செய்து கொண்டு நின்றது. அதன் கடிவாளச் சங்கிலிகளின் ஓசை கேட்டது. கடைகளில் இருந்த மனிதர்கள், கூட்டங் கூட்டமாக நாற்சந்தியை நோக்கி ஓடினார்கள்.