பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

ஓர் ஆற்றைக் கடந்து செல்லும் போது உமார் கண்ட அதிசயங்கள் அபூர்வமானவை. இப்படியே அவன் அந்தச் சாலைவழிக்குப் போகும்போது தூரத்திலே ஓர் அமீரி (இளவரசனின்) கூடாரத்திற்குச் செல்லும்படி நேர்ந்தது. அந்தப் பெரிய கூடாரத்திற்குள் சென்று அந்த இளவரசனைக் கண்டு பேசும் வாய்ப்பு உமாருக்குக் கிடைத்தது. அந்த இளவரசனைச் சுற்றியிருந்த துருக்கி வீரர்கள், தங்கத் தலைக்கவசம் அணிந்திருந்தார்கள். கூடாரத்தின் நடுவிலே நெருப்புக் கணப்பின் அருகிலே ஒரு சிவந்த விரிப்பின் மீது அந்த இளவரசன் அமர்ந்திருந்தான். அவனோடு அவனுடைய ஆசிரியர்களான சட்டநுணுக்கக்கலை அறிஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் ரஹீமைக் காட்டிலும் இரண்டு வயது இளையவன். அவனிடம் அந்த அறிஞர்கள் அவன் கண்ணில்பட்ட அந்த நட்சத்திரம் வடமீன் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் உமார் அது வடமீன் அல்லவென்றும் அந்த இடத்திலிருந்து பார்த்தால் வடமீன் தெரிவதற்கு மார்க்கமில்லையென்றும் தெரிந்து கொண்டிருந்தான். அந்த அறிஞர்கள் பெயர் அளவில் அறிஞர்களே தவிர எந்தவிதமான அறிவும் இல்லாத முட்டாள்கள். உமார் அந்த இளவரசனிடம் போய் அந்த வடமீன் நட்சத்திரத்தை இங்கிருந்து பார்க்க முடியாது என்று கூறினான். தன் ஆசிரியர்களின் பேச்சை மறுத்துச் சொல்லும் ஒருவனை செருப்பால் அடித்து விரட்டுவதை விட்டு விட்டு இளவரசன் “நட்சத்திரங்கள் மூலம், ஏதாவது, போரைப்பற்றிய செய்திகள் அறிந்து சொல்ல முடியுமா” என்று கேட்டான். வருங்காலத்தைப்பற்றிக் குறி சொல்ல முடிந்தால் ஞானிகளைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருந்திருக்கலாம். உமாருக்கு இதில் நம்பிக்கையில்லை, இருந்தாலும் இளவரசன் கேட்பதற்காகச் சொன்னான். தான் சொல்கிறபடி நடக்கும் என்பதில் அவனுக்கு நம்பிக்கையே கிடையாது. ஏதோ கேட்கிறான் சொல்லுவோம் என்ற முறையிலே சொல்லி வைத்தான்.

இரண்டு அரசர்கள் போரிடப் போவதாகவும், அந்தப் போரிலே, கீழைநாட்டைச் சேர்ந்த அரசன் மேலோங்கி வெற்றி பெறக் கூடுமென்றும், மேலைநாட்டுப் பேரரசன் தோற்றுவீழப் போவதாகவும் சொன்னான், முடிவில் அந்த இரண்டு அரசர்களுமே சாவுக்குப் பலியாவார்களென்றும் கூறினான். ஆனால் இதைக் கேட்ட அந்த இளவரசன் பேயையோ பூதத்தையோ கண்டு மிரண்டவன் போல விழித்தான்.