பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

உயர்ந்து கொண்டே சென்ற அந்தப் பாதை வழியாக மூடப்பட்டிருந்த கதவுக்கு வந்து சேர்ந்தான். உடனே, கொஞ்சம் கூடத் தயங்காமல் அந்தக் கதவைத் திறந்து அதன் அருகில் இருந்த ஒரு பரணில் மெழுகுவர்த்தியை வைத்தான்.

இதமான குளிர்ச்சியும், மதுவின் மணமும் பொருந்திய ஒரு நிலவறைக் குள்ளே தாங்கள் செல்வதை உமார் உணர்ந்தான். சுவர் ஒரமெல்லாம் சிறிய பீப்பாய்களும், பெரிய பீப்பாய்களுமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நடுவில் இருந்த இடத்தில் ஒரு விரிப்பின் மேல் ஆறு மனிதர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவிர்கள் அருகிலே விளக்கொன்று எரிந்து கொண்டிருந்தது. அக்ரோனோஸின் பக்கம் சாதாரணப்பார்வையுடன் திரும்பிய அவர்களின் கண்கள், உமாரைக் கருத்துடன் ஆராய்ந்து பார்க்கத் தொடங்கின.

நீண்ட சலாம் ஒன்று செய்து விட்டு பணிவுடன், அக்ரோனோஸ் விலகிக் கொண்டான், கல்லூரிப் பேராசிரியர் போலத் தோன்றிய ஒருவர் உமாரை வரவேற்க முன்வந்தார்.

“வருக! வருக! நட்சத்திரங்களின் தலைவரே! அழித்து ஒதுக்கப் பெற்ற இந்த ஆத்மாக்களின் கூட்டத்திற்கு வருக!

“இன்று எங்கள் ஒவ்வொருவருடைய தலைக்கும் விலை கூறப்பட்டிருக்கிறது” என்று இன்னொருவன் விளக்கங் கூறினான்.

உமார் அவர்களை வியப்புடன் ஆழ்ந்து கவனித்தான். ஒருவன், எகிப்திய மொழியின் மிகக் கனமான உச்சரிப்புடன் பேசினான்; ஒருவன் கிழிந்த மேலங்கியணிந்து கையில் ஒரு தடியும் சாமியார்கள் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரமும் வைத்திருந்தான். மற்றவர்கள், நல்ல பணம் படைத்த வணிகர்கள் போல் தோன்றினார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் ஒரு விஷயத்தில் ஒரே மாதிரியாகக் காணப்பட்டார்கள். அவர்கள் கண்கள், அவர்களுடைய அறிவின் திறத்தையும் நல்ல மனப்பான்மையையும் காட்டுவனவாயிருந்தன. எதையும் செய்து முடிக்கக்கூடிய காரியவாதிகளாகவும் அவர்கள் தோன்றினார்கள்.

“குவாஜா உமார் அவர்களே, வாளாயுதத்திற்குப் பயந்து தற்காலிகமாக மறைந்திருக்கும் இந்த நல்ல கூட்டாளிகளைப் பற்றி தங்களுக்கு அறிமுகப் படுத்த விரும்புகிறேன். நான் ஒரு