பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

ஆறு பேரும் ஒரே மாதிரியாக, அவன் பக்கம் திரும்பினார்கள். அந்தப் பேராசிரியர் கூடப்பேசாமல் இருந்தார். பிறகு, அக்ரோனோஸ்தான் முதலில் பேசினான்.

“குவாஜா உமார்! தங்களைப் பார்ப்பதற்காக ஹாசான் மாதக் கணக்காக காத்துக் கொண்டிருக்கிறான்” என்றான் அக்ரோனோஸ்.

அவர்களுடைய பயம் தளர்ந்தது. பேராசிரியர் பேசத் தொடங்கினார். “ஹாசான் இங்கு இல்லை. சில நாளைக்கு முன் அவன் நிசாமைப் பார்க்கச் சென்றான். ஆனால் இப்பொழுது மலைக்குப் போய்விட்டான்!”

நீண்ட நாளைக்கு முன் கேள்விப்பட்ட ஒரு விஷயம், சட்டென்று உமாரின் உள்ளத்தில் பளிச்சிட்டது. முதன் முதலில் பாபிலோன் மணல் மேட்டிலே ஹாசானைச் சந்திக்க நேர்ந்தபோது, அவன் தான் என்றும் உயரமான இடங்களிலேயே உலவுபவன் என்று கூறியிருக்கிறான். ரே நகருக்குப் பின்னால் உள்ள மலைப் பிரதேசத்தில்தான் ஹாசான் பிறந்து வளர்ந்தவன். ஏழாவது கொள்கைக் காரர்களின் தலைவன் பெயர் ஷேக் அல்ஜெபலா என்றும், மலைத்தலைவன் என்றும் மக்கள் பேசிக் கொள்வதையும் கேட்டிருக்கிறான். அப்படியானால் ஹாஸானும், மலைத் தலைவனும்...? உமாருக்கு விஷயம் ஒருவாறு புரிவது போலத் தோன்றியது.

ஹாஸானை எப்படியும் சந்திக்க வேண்டும் என்று உமார் விரும்பினான். சந்தித்து, தன்னைப் பற்றிய செய்திகளை, காசா குச்சிக்கில் வேவு பார்த்த ஒருவனிடமிருந்து, தபால் புறாவின் மூலம் அவன் தெரிந்து கொண்டது ஏன் என்று கேட்க வேண்டும். தன்னை அவன் உளவு பார்க்க வேண்டிய காரணத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், டுன்டுஷ் உடைய கண்களின் எதிரில் ரே நகரில் இருந்து வருவது அவனுக்குப் பிரியமில்லை. மீண்டும் தன்னை நிசாம் அழைக்கும்படி ஏற்பட்டு விடுவதையும் உமார் விரும்பவில்லை.

அக்ரோனோஸ், உமார் அருகிலே நெருங்கி வந்து சாய்ந்துகொண்டு, மெல்லிய குரலிலே, ஹாஸான் தங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். தங்களுடைய கண்ணைக் கவர்ந்த அழகி ஒருத்தி அவனிடம் இருக்கிறாள்” என்றான்.