பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278


கீழேயுள்ள சமவெளிப் பிரதேசத்திலே நடமாடும், வரி விதிப்பு என்னும் வாளுக்கும், மதகுருக்கள் என்னும் கொடுமைக்கும் தப்பி வந்துவிட்டோம். அரசரின் ஆதரவுபெற்ற குவாஜா உமார் அவர்களுக்கு அவை அற்ப விஷயங்களாக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற முஸ்லிம் அல்லாத வியாபரிகளுக்கு அவை விலங்கு போன்றவைதாம். அர்மீனியர்களாகிய நாங்கள் அடிமைகளைப் போலவே நடத்தப்படுகிறோம். ஆனால் இங்கே, இந்த இடத்திலே சுதந்திரம் இருக்கிறது!”

அவனுடைய குரலிலே ஒரு புதுமை ஆர்வம் தொனித்தது. அந்த மலைப் பிரதேசத்திலே சந்திக்கவேண்டிய இடம் நெருங்கி வரவர அவனுக்கு மகிழ்ச்சி பெருகியது. அடிக்கடி தன்னுடைய குதிரையை அடித்துக்கொண்டும் உமாருடைய குதிரையை நிற்கும்போதெல்லாம் இழுத்துக்கொண்டும் போனான். அந்தப் பாதை வழியாக வேறு குதிரைகளும் மனிதர்களும் போய் வந்து கொண்டிருந்தார்கள். மெதுவான குரலில் வரவேற்புகளும், அடங்கிய சிரிப்பொலியும் உமாரின் காதில் விழுந்தன. ஆனால், யாரும் ஒரு விளக்குக் கூட எடுத்துச் செல்வதாகத் தெரியவில்லை.

கண்ணுக்குத் தெரியாத காவல் வீரர்களால் அவர்கள் சிறிதுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டபொழுது, கீழே ஓர் ஆற்றின் ஓசையைக் கவனித்தான். குளிர்ந்த காற்று அவர்களை உலுக்கிக்கொண்டு வீசியது. பைன்மரங்களின் வாசத்தை உமார் கவனித்துக் கொண்டான். உடைந்த கற்களின்மேல், மட்டக் குதிரைகள் ஏறிக்கொண்டிருந்தன.

கடைசியில் ஒரு குரல் அவர்களை நிறுத்தியது.

“நில்லுங்கள்! இருட்டில் சுற்றுகின்ற நீங்கள் யார்!”

“ஏழு கூட்டாளிகள்” என்று அக்ரோனோஸ் கூறினான்.

“என்ன தேடுகிறீர்கள்?”

“இன்னும் வராத அந்தநாளை!” அதற்குப் பின் தொடர்ந்து, கேள்வியும் இல்லை, பதிலும் இல்லை! மறுபடியும் குதிரைகள் முன்னோக்கிச் சென்றன. அவற்றின் காற் குழம்புகள், திடமான கற்களின்மேல் ஒலி