பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

கட்டளையிட்டான். அது மது. திருமறையால் தடைசெய்யப்பட்ட பொருள். ஆனால் அந்தப் புனிதமான மகத்தான போரிலே அடையப்போகும் வெற்றிக்கு முன்னாலே, மது குடிக்கும் இந்தச் சிறிய பாவம், கடலில் கரைத்த பெருங்காயம் போல் மறைந்துவிடும் என்று சொல்லிக் கொண்டே அதைக் குடித்தான். உமாரும் உயிர்த் தோழனின் பாதையைப் பின்பற்றி அவனும் குடித்தான்.

“இருந்தாலும் நான் தோற்றுப்போக நேரிட்டாலும் நேரிடலாம்” என்று உமார் சொன்னதற்கு, “இல்லை, நாம் தோற்கவே மாட்டோம். நம் துருக்கிய சுல்தான் சாதாரண வீரராக இருக்கலாம். ஆனால், அவர் எந்தச் சண்டையிலும் தோற்பதேயில்லை. இது சரியான குறிச்சொல்லாகும், நாம் நிச்சயம் வெற்றியடைவோம்!” என்று கூவினான் ரஹீம்.

இனிக்கும் அந்த மது அவனுக்குப் புத்துணர்ச்சி அளித்தது. மறுபடியும் ஒரு குவளை ஊற்றிக் குடித்தான்.

சுல்தானுடைய செங்கொடியின் கீழே தன் அருமையான கருப்புக் குதிரையின் மேலே வீசிய வாளுடன் தான் பறந்து செல்வது போலவும், படைவீரர்களின் அணிவரிசைகளின் ஊடே, தன் குதிரை செல்வது போலவும். எதிரிகளான கிறிஸ்தவர்களின் சேனைகளை நோக்கிச் சென்று, அவர்களில் ஒரு தலைவனை நேருக்கு நேரே சந்தித்து வாளைச் சுழற்றிப் போருக்கு இழுத்து, அந்த மாற்று மதக்காரனுடைய தலையைத் தன்னுடைய வாளால் துண்டித்து விடுவது போலவும், இஸ்லாமியப் படைகள் உடனே ஜெயபேரிகை முழக்கித் தன்னைப் புகழ்ந்து கூவித் துள்ளிக் குதிப்பது போலவும், தான் வெட்டி வீழ்த்திய அந்த வீரனின் தலை துடித்துப் பறந்து சென்று தன் சுல்தானுடைய குதிரையின் காலடியிலே போய் விழுந்து மிதிபடுவது போலவும் ஒரு கற்பனை அவன் உள்ளத்திலே உருவாகியது.

அந்தக் கற்பனை வெறியிலே தன்னை மறந்து ரஹீம் தன் வெற்றியை உயிர்த்தோழன் உமாரும் காணவேண்டும் என்று அவனைக் கூவியழைத்தான்.

ஆனால், அந்த உயிர்த்தோழன் உமாரோ, போரையும் பூசலையும் வெற்றியையும் விழாவையும் சற்றும் எண்ணாமல் ஒட்டகத்தோல் ஆடைகளின் ஊடே ஆழ்ந்து அயர்ந்து அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தான்!