பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

291


அந்தக்குள்ள மனிதன் நடுங்கும் கரங்களுடன், ஒரு மதுச் சட்டியை வாங்கி, இருந்த மது முழுவதும் குடித்து விட்டான், அந்தச் சமயத்தில் அவர்கள் அருகிலே இருந்த ஒரு கத்தி நடனக்காரன். ஒரு துணியை எடுத்து, அந்தக் கத்தியில் படிந்திருந்த இரத்தக் கறையைத் துடைத்தான்.

‘அது உண்மையான இரத்தந்தானே?” என்று உமார் கேட்டதும், அந்த வீரன் உறுமிக் கொண்டே, அந்தக் கொடுவாளை உமார் கண்ணுக்கு முன்னாலே நீட்டி, தொட்டுப் பார்; நுகர்ந்து பார்! அதற்கும் மேலாக நீ சந்தேகப்பட்டால் உன்னுடைய சொந்த இரத்தத்தையே, உண்மையானதா? பொய்யானதா? என்று பரிசோதித்துப் பார்ப்பதற்குத் தருவேன்.” என்று கூவியபடி நின்றான்.

மற்றவர்களும் இதைக் கேட்டுவிட்டுத் தங்கள் கொடுமையான பார்வைகளை உமாரின் பக்கம் திருப்பினார்கள்! அந்த நடனமும், அவர்களுடைய உணர்ச்சியும், அப்பொழுது ஏதாவது கொடுஞ் செயல் புரியக்கூடிய பீதியான ஒரு மனோ நிலையை அவர்களுக்கு உண்டாக்கியிருந்தன.

“யா, அல்லா! அவன் யார்? எப்படி நம்மிடையே வந்தான்? யார் அவனை அழைத்து வந்தது? என்ற கேள்வி எழுந்தது!

ரக்கின் உட்டின் அவசர அவசரமாக அருகில் இருந்த ஒரு சட்டிமதுவை வாங்கி உமாரிடம் கொடுத்து’ “இதைக் குடியுங்கள்! கூண்டிலிருந்து திறந்துவிடப்பட்ட புலிகளைக் காட்டிலும் கொடுமையானவர்கள் இவர்கள்” என்று உமாரிடம் கூறிவிட்டு, கூட்டத்தை நோக்கி, “இவர் நம்முடைய விருந்தாளி. நம் தலைவரின் திருமுகத்தைக் காண இவன் வரவேண்டுமென்பது அவருடைய உத்தரவு” என்றான்.

“அவனுக்காகப் பதில் பேசுவது யார்?” என்று மறுபடியும் ஒருவன் கேட்டான்.

உமாரைச் சுற்றிக் கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு, ஒரு இளைஞன் முன்னுக்கு வந்தான். உமாரின் எதிரே வந்து நின்று கொண்டு இடுப்பில் சொருகியிருந்த குத்துக் கத்தி யொன்றைக் கையில் பிடித்துக் கொண்டு, “இப்பொழுது சொல்லுங்கள் யார் இவனுக்காகப் பேசுவது?” என்று கூவினான்,