பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

வருவதுபோல் இருந்தது நின்று கவனித்தான். அந்த நிழலும் நின்றது, நல்ல வேடிக்கை என்று அவன் சிரித்தான்.

அவன் ஆந்த விட்டுக்குள்ளே நுழைந்ததும், அது மெதுவாக ஆடியது. எதிரில் இருந்த திரையை இழுத்துவிட்டு உள்ளே பார்த்தான், இரத்தினக் கம்பள விரிப்பின்மீது இன்னொரு வெள்ளி நிலாவைக் கண்டான், அவன் அதைத் தொட்டுப் பார்த்தான். அ கதகதப்பான ஒளிப்பந்து போன்ற வட்டவிளக்காக இருந்தது. ஆனால் அவனால் அதை எடுக்க முடியவில்லை, அதன் பின்னால் ஏதோ அசைந்தது. ஒரு குரல் மல்லிய குரலிலே அவனை அழைத்தது.

“இபுராகீம் மகனே!” அந்தக் குரலைக் கேட்ட உமார் கீழே உட்கார்ந்து, சிந்திக்கத் தொடங்கினான்.

“இல்லை இப்ராகீம் மகன் இல்லை, இப்பொழுது நான் யார் தெரியுமா? நட்சத்திரப் பேராசிரியரும், அரசசபை வான நூற்கலைஞரும் ஆகிய மேன்மை பொருந்திய குவாஜா இமாம் உமார் அவர்கள், தெரிகிறதா? இருட்டில் இருக்கும் சிறு பிராணியே; சலாம் செய்!” என்றான்.

“இதோ நான் சலாம் செய்கிறேன். தங்கள் அடிமையிடம் கருணை காட்டுங்கள்.”

அந்த சொர்க்கத்தின் அழகு தேவதையின் குரல் தாழ்ந்ததாகவும் விசித்திரமாகவும் இருந்தது. கனவிலே தோன்றும் பிராணிகள், அரபியிலோ, பாரசீகத்திலோ பேசுவதில்லை. ஆனால், இந்த அழகி பேசுகிறாள். பேசுவதும் புரிகிறது. அவன் காலிலே விழுந்து வணங்கிய அவளுடைய தங்கமயமான நீண்ட கூந்தலை அவனுடைய விரல்கள் தடவின. அது பட்டுப் போல் மிருதுவாக இருந்தது.

“இந்தப் படகு எல்லையில்லாத இரவின் வழியாக மிதந்து செல்லுமா!”

“ஓர் இரவு மற்றோர் இரவு போலவேதான் இருக்கும்.”

“ஆனால், இந்த நிலவு மாறாது போலிருக்கிறது. அது தோன்றுவதுமில்லை மறைவதுமில்லை; வளர்வதுமில்லை, தேய்வதுமில்லை; வேதாளங்கள் அதன் அருகிலே இருந்துபாடும் போதும்.”