பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

5. ஆருயிர்த் தோழனின் ஆவி பிரிந்தது!

கிழக்கையும், மேற்கையும் ஒருங்கே ஆண்ட பேரரசர், உலகத்தின் இறைவர் சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்கள் தம்முடைய படை பயணிகளுடன் போர்க்களத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அவர்களுடைய ஒட்டகங்களும், குதிரைகளும், கழுதைகளும் அர்மீனியன் மலைப்பள்ளத்தாக்கில் உள்ள அர்சானா ஆற்றங்கரைச் சமவெளியை நோக்கி நடந்து கொண்டிருந்தன. அரசருடைய விகடனான ஜபாரக்கும் அந்தக் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று கொண்டிருந்தான். குள்ளமான அவனுடைய கால்கள் இரண்டையும் இரு பக்கங்களிலும் தொங்கவிட்டுக் கொண்டு, கழுதையின் மீது உட்கார்ந்திருந்தான். குறித்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்ததும் அவனைச் சாமான்களும் மிருகங்களும் இருக்கும் இடத்திலேயே இருக்கச் சொன்னார்கள். இஸ்லாமிய மதத்தலைவர்களான முல்லாக்களும் கூட அங்கேயிருந்தார்கள். ஏனென்றால் அதுதான் போர்க்களத்தின் ஆபத்தில்லாத பகுதியாகும். ஆனால் கோமாளி ஜபாரக் சுல்தானுடைய முதுகுப்புறம்தான் ஆபத்தில்லாத இடம் என்று கூறினான். இஸ்லாமியர்கள் அவர் முதுகை நோக்கி அம்பு எய்ய மாட்டார்கள் என்றும் கிறிஸ்தவர்களுக்கு அவர் முதுகு தெரியவே தெரியாதென்றும், ஆகவே முதுகுப் புறத்தில் இருப்பவனை எந்தவிதமான அம்பும் தாக்க இடமில்லை என்றும் அவன் விளக்கம் கூறினான். சுல்தான் அவர்களுக்கு ஜபாரக்கின் இந்த அபூர்வ யோசனையைக் கேட்டதும், சிரிப்பு வந்தது. போர் பற்றிய சிந்தனை ஏற்பட்டதிலிருந்து இன்றுவரை ஒருமுறை கூடச் சிரித்தறியாத சுல்தான் அன்று சிரித்துவிட்டார். அவருடைய ஆணைப்படி, ஜபாரக் அவர் அருகிலேயே இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அடிமைகள் படைக்கலங்கள் அணிந்து, செங்கொடியும் ராஜகுடையும் பிடித்துவர சுல்தான் அவர்களின் அருகிலேயே ஜபாரக்கும் இருந்து வந்தான்.

பள்ளத்தாக்குப் பிரதேசத்தின் தொடக்கத்திலேயே மாலஸ்கர்டு பட்டணத்தின் கோட்டைச் சுவர் அருகே தம்முடைய கொடியை நாட்டச் சொன்னார். அவருக்கு எதிரிலே நீண்டு விளங்கிய வளமான அந்தப் பள்ளத்தாக்கின் மேற்பகுதியிலிருந்து