பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

ஐயப்பட்டதில்லை. ஒருமுறை சொர்க்கம் சென்றவர்கள், மறுபடியும் செல்லும் சந்தர்ப்பம் வருமா என்றே எதிர்பார்த்து நிற்பார்கள். அவர்கள் அனைவரும் இளைஞர்கள், அதை விரும்புவதும் இயற்கையேதான். என்னைப் பின்பற்றுவோரும் அதற்காக ஏங்குகிறார்கள். ரே நகரிலே சந்தித்தாயே, கூட்டாளிகள் சிலர், அவர்கள் வான அமைப்பைப்பற் ஐயப்பட்டாலும்கூட, அந்த சொர்க்க போகத்தை அனுபவிப்பதில் மற்றவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.”

“ரக்கின் உட்டினும் அவனைச் சேர்ந்த பிரசாரகர்களும் எப்படி? அவர்கள் உன் சொர்க்கத்திற்குப் போவதுண்டா?”

“இல்லை, என்றுமே செல்வதில்லை. அவர்கள் அனைவரும் அறிவு வேலைக்காரர்கள், நூல் நிலையமும், ஆராய்ச்சிக்கூடமுமே அவர்களுடைய கேந்திரங்கள். அவர்கள் தங்கள் நோக்கத்திற்குத் தகுந்த இன்பங்களைக் காணுகிறார்கள். என்னுடைய வேலைக்காரர்கள் பல பிரிவுகளாய்ப் பிரிக்கப்பட்டிருப்பதை நீ புரிந்து கொண்டிருக்கலாமே!”

‘ஆம்! அர்ப்பணம் செய்தவர்கள் என்ற காவற்படைகளும், பின்பற்றுவோர் என்ற தொண்டர் கூட்டமும், கூட்டாளிகள் என்ற தலைவர்களும், அறிஞர்களும் ஆக நான்கு வகையான பிரிவுகளைக் கூறினாய்!”

“ஐந்தாவது பிரிவிலே வெளிப்புறத்தார். அதாவது அக்ரோனோஸ் போன்ற வியாபாரிகள் அடங்குவார்கள். அவர்கள் வெளியுலகத்திலிருந்து பொருள்கள் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் என்னிடமிருந்து நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அறிவுக் கோட்டையின் வாசலுக்கு அப்பால் நுழைய விடப்படுவதில்லை.”

அக்ரோனோஸ், ஒருமுறை கழுகுக் கூட்டின் வாசல்வரை வந்திருப்பதாகக் கூறியது உமாருக்கு நினைவு வந்தது.

“ஹாஸான், உனக்கு ஏராளமான பெயர்கள் இருக்கின்றனவே!”