பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

303

அறிந்து கொள்வதற்காக நான் சில சமயங்களில் தபால் புறாக்களைப் பயன்படுத்துவதுண்டு. என்னுடைய பிரசாரகர்களுக்குக்கூட இந்த விஷயம் தெரியாது. ஏனெனில் அந்தப் புறாக்கள் கோட்டைக்கு வருவதில்லை. பக்கத்துக் கிராமத்துக்கே வரும் சரி. நமது பகைமை உணர்ச்சி என்ற கத்திப் பிடியிலிருந்து நம் கைகளை அகற்றி விடுவோம்; நமக்கிடையேயுள்ள கருத்து வேற்றுமை என்ற திரையைக் கிழித்து விடுவோம்” என்றான், ஹாஸான் விசித்திர தொனியில்.

பிறகு, உமாரின் அருகிலே நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டு அவனுடைய தோளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, “ஹாஸான் என்றால் யார்?” என்று நீயே உன்னைக் கேட்டுக் கொண்டிருப்பாய். அப்படியானால் கேள். நான் யார் என்பதைக் கூறுகிறேன். ஒரு காலத்திலே, மாணவனாக இருந்த நேரத்திலே கீழ்த்தரமான ஓர் உயிர்ப்பிராணியாக அனாதையாக இருந்தவன்தான் இந்த ஹாஸான். அரசர்களும் அமைச்சர்களும் இருந்து நம் உடல்களையும் ஆத்மாக்களையும் ஆளுகின்ற இடத்திலே அறிவைத் தேடுகின்றவனுக்கு என்ன நன்மையிருக்கிறது? கெய்ரோ நகரத்தில் ஆயுதந்தாங்கிய காவற்படை வீரர்களால் தெரு நாயைப் போல் அடிக்கப் பெற்றேன்! அந்த இளம் பருவத்திலே அவமானப் படுத்தப்பட்டு - ஏழ்மையின் காரணமாக ஏளனஞ்செய்யப்பட்டு வாழ்விலே நொந்து போயிருக்கிறேன்.

கெய்ரோவிலே உள்ள பேராசிரியர் சிலரிடமும், கடல் கடந்து சென்று திபேரியர்களின் முதுகுரவர்களான கபாலியரிடமும் நான் பற்பல நூல்களைக் கற்றேன். பலப்பல வார்த்தைகளைச் சொல்லி நான் உன்னைக் குழப்ப விரும்பவில்லை. கற்பனையான சொப்பன உலகில் நட்சத்திரங்கள் மங்கிய மாயாஜாலத்தை நீயே கண்டிருக்கிறாய். அறிவு என்கிற பழத்தின் கசப்பான பருப்பை நான் சுவை பார்த்திருக்கிறேன். என் முடிவு இதுதான் கடவுள் என்பதாக ஒன்று இல்லை.

உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் வயது முதிர்ந்துவரும் பெண்களைப் போன்றவையே. அவற்றின் அழகும் பயனும் மறைந்துவிட்டன. அவை, மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக நம்பிக்கை என்னும் காய்ந்துபோன எலும்புக் கூட்டிலேயே ஒட்டிக் கொண்டிருக்கின்றன. விரைவில் அவை