பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

கிறிஸ்துவர்களின் படை முன்னேறி வந்து கொண்டிருந்தது. அந்த ரோமன் படைகளைத் தலைமையரசரான கான்ஸ்டான்டிநோபிள் பேரரசரே நடத்திக்கொண்டு வந்தான். கான்ஸ்டான்டிநோபிள் பேரரசரின் முன்னோர்கள், பரம்பரையாகவே கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளாகவே இஸ்லாமிய மதத்தின் நேர் எதிரிகளாக விளங்கி வந்திருக்கிறார்கள்.

சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்கள், அந்தப் பேரரசரின் ஆளுகைக்குட்பட்ட தேசங்களிலே அடிக்கடி தன் படைகளை அனுப்பிப் பலபகுதிகளைத் தாக்கிக் கொண்டு வந்தார். இது தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஒருமுறை ஆசியா தேசத்தின் ரோமாபுரி என்று பெயர் பெற்று விளங்கிய ஆசியா மைனர் வரையிலும் சென்றுகூட அவருடைய குதிரைப்படை தாக்கிவிட்டு வந்திருக்கிறது. சுல்தானின் படையினர் ரோமர்களைத் தாக்கிக் காயப்படுத்திப் பெருங்கோபம் கொள்ளும்படி செய்துவிட்டு வந்தது, கான்ஸ்டாண்டி நோபிள் பேரரசரின் பெருஞ்சினத்தைக் கிளப்பிவிட்டது. தன்னை எதிர்த்துப் படைதிரட்டி வந்து, தம்முடைய எல்லைக்குள்ளேயே நடந்து வந்துவிட்ட இஸ்லாமியப் படைகளை எதிர்த்து முறியடிப்பதற்காக அந்தப் பேரரசர் தம் வசமுள்ள எல்லாவிதமான ஆயுதங்களையும் ஒன்று திரட்டினார். விற்பயிற்சியில் தேர்ந்த பல்கேரியப் படைகளும், வாட்போரில் இணையில்லாத ஜார்ஜிய சேனைகளும், இஸ்லாமியரின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக இணைந்து வந்த ஆர்மீனியப் படைகளும்; தன்னுடைய திறமை பெற்ற குதிரைப் படைகளும், எண்ணிக்கை மிகுந்த காலாட்படைகளும் ஒருங்குசேர ஒரு பெருஞ்சேனையையே நடத்திக்கொண்டு ரோமர்களின் பேரரசர் கான்ஸ்டாண்டி நோபிளின் கிறிஸ்தவ மன்னர், துருக்கிப் படைகளை விரட்டியடித்துக் கொண்டு முன்னேறி வந்தார். துருக்கிப் படைகளின் எண்ணிக்கை பதினையாயிரம். எதிர்த்து வந்த ரோமர் படைகளின் எண்ணிக்கையோ எழுபதினாயிரம். கிறிஸ்தவர்களின் பேரரசர் பேராண்மைமிக்க ஒரு வீரர். துருக்கியரின் குதிரைப் படையினர் எத்தனையோ நாட்களாகத் தனக்குக் கொடுத்து வந்த தொல்லைகளைக் கண்டு பொறுமை மீறப் போருக்குக் கிளம்பி வந்திருக்கிறார். அவருடைய ஆவேசமும் அதிகம்! படைகளும் அதைவிட அதிகம்!