பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

309

அரண்மனைச் சுவர்களிலே மட்டும்தான் பதிக்கப் பெற்றிருந்தன. நவீன வசதிகளை சுல்தான் மட்டுந்தான் அனுபவிக்க வேண்டுமா?

இப்போது, என்னுடைய வியாபாரிகள், ஊர் ஊராக அங்காடிச் சந்தைதோறும் இந்தக் கண்ணாடிப் பொருள்களை விற்று வருகிறார்கள். எல்லாவிதமான கண்ணாடிப் பொருள்களும் எல்லாவிதமான மக்களுக்கும் எளிய விலையில் ஏராளமாகக் கிடைக்க முடிகிறது” என்று கூறித் தொழிற்சாலைப் பகுதியிலிருந்து, சரக்கறைக்குக் கூட்டிச் சென்றான்.

அங்கே மதுச்சாடிகளும், கோப்பைகளும், தேன் வைக்கும் போத்தல்களும், தட்டுகளும், குவளைகளும் மற்றும் பலப்பல விதமான கண்ணாடிச் சாமான்களையும் உமார் கண்டான். ஓர் அடிமையை விளக்குக் கொண்டு வரும்படி கூறி, அது வந்ததும், வேறோர் அகன்ற அறைக்குள்ளே கூட்டிச் சென்ற ஹாசான், விளக்கின் ஒளியிலே அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி முட்டைகளைக் காண்பித்தான். “இந்தக் குகைகளிலே என்னைச் சேர்ந்தவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் இரண்டு வருடங்களுக்குப் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வேளை பகைவர்களால் முற்றுகை நேரிடுமாயின் அப்பொழுது நாங்கள் உணவுக்குக் கவலைப்பட வேண்டியதில்லை” என்று கூறினான்.

அந்த நிலவறைகளின் கீழேயுள்ள தாழ்ந்த பாகத்திற்கு வந்தார்கள். அங்கே சில மரப்பீப்பாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்திலே ஒரு பாறையின் இடையிலே, கரிய துவாரம் ஒன்று இருந்தது. அந்தத் துவாரத்திலிருந்து, வெகு வேகமாகப் பீறிக் கொண்டு வந்த தண்ணி, சிறிது தூரத்திலே இருந்த குட்டையிலே விழுந்தது.

“வெகு காலத்துக்கு முன்னாலே, இந்த ஓடை ஓர் ஆறாக இருந்திருக்க வேண்டும். அது கொஞ்சம் உயர்ந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும். அது, இந்தச் சுண்ணாம்புக் கற்களின் வழியாகத் தன் வழியை அறுத்துக் கொண்டு வந்து, இந்த மலையின் ஊடே பெரிய பெரிய பாதைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நீ இதுவரை பார்த்த நிலவறைகளும், குகைகளும் அந்த ஆறு அறுத்துக் கொண்டுபோன பாதையேயாகும். பிற்காலத்திலே பூமியில் ஏற்பட்ட ஏதோ