பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

315

போய்விட்டதனால் என்ன நஷ்டம் வந்துவிட்டது? அவையிருந்து என்ன சாதிக்கப்போகின்றது? இதோ மறைந்து கொண்டிருக்கும் கதிரவன், மீண்டும் கீழ்த்திசையிலே தோன்றுவதற்கு முன்னால் உள்ள இடை நேரத்திலே எத்தனையோ ஆயிரம் மனிதப் பூச்சிகள் இறந்து மறைந்து, இந்த உலக மென்றும் சாணிமேட்டிலே இன்னும் ஆயிரக்கணக்கான பூச்சிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தனை வெள்ளத்திலே இந்த மூன்று உயிர்களும் மூன்று துளிகளே! இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இப்பொழுது நீ என்னுடைய சக்தியின் ஒரு சிறுபாகத்தை ஓரளவு தெரிந்து கொண்டிருக்கிறாய். இதிலிருந்து என்னுடைய சக்தி எவ்வளவு பெரியதென்று நீ தெரிந்து கொள்ளலாம். நீ என்னுடைய கூட்டாளியாக என்னுடைய அறிஞர்களின் கூட்டத்திலே இருக்கலாமல்லவா? உன்னுடைய வேலை இப்பொழுது உள்ளதுபோலவே வானநூல், கணிதநூல் ஆராய்ச்சியாகவே இருக்கும்.”

“இங்கேயா? இந்தக் கழுகுக் கூட்டிலா?”

“இல்லை, இந்த உலகத்திலேயே. நீ முன் இருந்ததுபோலவே முழு உரிமையுடன் இருக்கலாம். உனக்கு என்ன வேண்டுமோ கேள். ஸோயி என்ற அந்த அழகிய பெண் வேண்டுமா? அலெக்ஸாண்டிரியா தேசத்து ஆராய்ச்சி நூல்கள் வேண்டுமா? எது வேண்டுமானாலும் கொண்டு வந்து கொடுப்பதாக உறுதியளிக்கிறேன். என் சொல்லுறுதி எப்பொழுதும் மாறியதில்லை. இப்பொழுது உனக்கிருக்கும் செல்வமும் செல்வாக்கும் என்னிடமிருந்து நீ பெறப்போகின்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மிகச் சாதாரணமாகிவிடும்.”

இருள் சூழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஆழமான பள்ளத்தாக்கை உமார் உற்று நோக்கினான். ஹாஸானை நோக்கி, “நான் ஒப்புக் கொள்ளாவிட்டால்?” என்று கேட்டான்.

“இப்பொழுதே உன்னை நிசாப்பூருக்குத் திருப்பியனுப்பிவிட மாட்டேன். சில காரியங்கள் நடந்து முடியும் வரையிலே, நீ இப்பொழுதிருப்பது போலவே இங்கேயே