பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

327


உமாருக்குப் பயமாக இருந்தது. ஆனாலும் தொடர்ந்து மேல் சென்றான். அவனுடைய உடையைப் பார்த்த அவர்கள், ஈட்டிகளைத் தூக்கிக் கொண்டு, “கடவுள் காப்பாராக!” என்று கூவினார்கள்.

“கடவுள் உங்களையும் காப்பாராக!” என்று கூவியபடி பறந்தான் உமார். அவர்கள் பார்வைக்குத் தப்பிச் செல்லும் வரையிலே, குதிரையை இரத்தம் வரும்படி அடித்துப் பாய்ந்து பாய்ந்து செல்லும்படி செய்தான். பைன் மரக்காடுகளுக்கு அப்பால் வந்ததும்தான் அவனுக்கு முச்சு வந்தது.

திடீரென்று அவனுக்குச் சிரிப்பு வந்தது. கழுகுக்கூட்டுக் காவலன் கையிலேயுள்ள குழாய்ச் செய்தியில் “உமார் ரே நகர் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்” என்று எழுதியிருந்ததை நினைத்தால் சிரிப்பு வராமல் என்ன செய்யும்?


40. “உனக்கும் எனக்கும் ஒத்து வராது!”

இருள் சூழ்ந்துவரும் நேரத்திலே சமவெளிப் பிரதேசத்தின் வழியாக வந்து கொண்டிருந்த உமார், தூரத்திலே வயலோரத்தில் சில குடிசைகளைப் பார்த்தான். அவன் குடிசைகளின் அருகில் வந்தபோது, நன்றாக இருட்டிக்கொண்டது.

குடிசைகளில் விளக்குகள் ஏற்றப்பெற்றிருந்தன. முதல் வாசல் அருகிலே வந்ததும், குதிரையைவிட்டு இறங்கியதும் அந்தப் பண்ணையின் தலைவன் யார் என்று கேட்டதும் பண்ணைத் தலைவனிடம் உமார் அழைத்துச் செல்லப்பட்டான்.

இந்தப்பண்ணை, கழுகுக் கூட்டின் பக்கமாக இருப்பதால் இவர்கள் ஹாஸானுடைய உதவியாளர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்து தலைவனை நோக்கி, ‘ஷேக் அல் ஜெபல் அவர்களுடைய ஆணையின்படி நான் செல்லுகிறேன். எனக்கு ஒரு புதிய குதிரைவேண்டும் என்றான்.

‘யார்! மேலேயிருக்கிறாரே அவரா!’

‘ஆம்! கழுகுக் கூட்டின் தலைவர்.’