பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

செய்யப்பட்டபடியே நடக்கும் போலும், கிறிஸ்தவப் பேரரசனின் அவசரத் தன்மையும், சேறு குழம்பிய வயல் வெளியும், எந்தப் போரிலும் தோல்வியே கண்டறியாத துருக்கிப்படைகள் ஆடாதசையாமல் நிற்கும் வன்மையையும் பார்க்கும் பொழுது, விகடன் ஜபாரத்திற்கு இது ஏற்கெனவே விதியால் எழுதப்பட்டபடிதான் நடந்தாலும் நடக்கும் போலவும், வெற்றி தோல்வி முன்னாலேயே நிச்சயிக்கப்பட்டது போலவும், விதியின் சொக்கட்டான் விளையாட்டில், நாளைக்கு இந்தப் படைகளெல்லாம் அங்கும் இங்கும் காய்கள் உருட்டப்படுவது போல் நகர்த்தப்படப் போவது போலவும் தோன்றியது.

சுல்தான் ஆல்ப் அர்சலான் அன்று இரவு முழுவதும் தூங்கவேயில்லை.

குளிர் நடுக்கத்தைத் தாங்க முடியாமலும், உள்ளத்திலே ஓடிக் கொண்டிருந்த உணர்ச்சியின் காரணமாகவும், விடிவெள்ளி தோன்றுவதற்கு முன்னாலேயே ரஹீம் எழுந்து விட்டான். யார்மார்க் என்ற வேலைக்காரனிடம் வாளைக் கொடுத்து அதைத் தீட்டிக் கூராக்கி வைக்கும்படி அடிக்கடி ஆணையிட்டான், மற்ற வேலைக்காரர்களை விட்டு அவனுடைய கருப்புக் குதிரையைத் தேய்த்துவிடச் சொன்னான். அவசர அவசரமாக ஊற வைத்த பார்லியையும் பேரீச்சம் பழத்தையும் கொஞ்சம் விழுங்கினான். போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால், மான் வேட்டையாடுவது போல் அது தோன்றவில்லை. அல்லது அவன் எதிர்பார்த்தபடியும் இல்லை. காலை விடிந்தவுடன் போரழைப்பு வருமென்றும், வந்தவுடன் முழக்கமிட்டுக் கொண்டு கிளம்ப வேண்டுமென்றும் காத்திருந்த ரஹீம், அமைதியில்லாமல் அவனுடைய குதிரையைச்சுற்றி வந்தான். திரைக்கு அப்பால் அவனுடைய ஆட்கள் சொக்கட்டான் உருட்டிக் கொண்டிருந்தார்கள். அவன் குதிரை மேல் ஏறிய சமயம் அவனைக் கடந்து நடந்து செல்லும் ஈட்டிபிடித்த வீரர்களின் எண்ணற்ற தலைகளைக் கண்டான். சில சமயங்களில், தூரத்தில் உள்ள காட்டின் ஊடே காற்று துளைத்துக் கொண்டு அடிப்பது போன்ற ஓசை கேட்டது. நிஜாப்பூர் பகுதியில் மக்கள் கூடும்போது ஏற்படும் இரைச்சல் போலப் பள்ளத்தாக்கிற்கு அப்பால் இருந்து பெருங்கூச்சலும் சப்தமும் அடிக்கடி எழுந்ததையுணர்ந்தான்.