பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

329


மண்ணையும் உருட்டிப் புறாவின் உருவம்போல, உடலும் தலையும் செய்தான். பிறகு, இரண்டு கம்புக் குச்சிகளை ஒடித்துக் காலாகச் சொருகினான், செய்து முடித்த பிறகு ஒரு புறத்திலே வைத்தான்.

‘இதோ பார் நாளைக்கு வெயிலிலே இதைக் காயவைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்த பிறகு அடுத்த நாள் நீ இதைத் தண்ணிருக்குப் பக்கத்திலே வை, காற்றிலே பறக்கிற புறாக்கள் எல்லாம் இதன் அருகிலே வந்து இதனோடு பேசிக் கொண்டிருக்கும். நீ கரையிலே இருந்தபடி பார்த்துக் கொண்டிரு. ஆனால், நீ அசையாமல் இருந்தால் அதிக நேரத்திற்கு அவை இங்கேயே இருக்கும். அவற்றைப் பிடிப்பதற்காக ஓடினால் அவை பறந்து போய்விடும், தெரிகிறதா?

‘இது அவற்றைப் போலவே இருக்கிறதே!’ என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் அந்தச் சிறுமி.

அந்தக் குடியானவர்கள் ஒரு குதிரை கொண்டு வந்தார்கள். அதைப் பார்த்தால் பண்ணை வேலை செய்யும் குதிரைபோல் தோன்றவில்லை. தான் மலைத் தலைவனுடைய ஆள் என்பதற்காக நல்ல சவாரிக் குதிரையாகக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

புறாக்கூண்டைத் தூக்கிக்கொண்டு குதிரையின்மேல் ஏறிக் கொண்டான்.

சேணத்துக்கால் மிதியைப் பிடித்துக்கொண்டே, பண்ணைத் தலைவன். ‘இன்னும் வராத அந்த நாள் விரைவில் வருமா?’ என்று மெதுவாகக் கேட்டாள்.

‘எனக்குத் தெரியாது, அது ஆண்டவனுக்குத் தெரியும்’. இந்தப் பதிலைக் கேட்டதும், அவன் உமாரைப் போக அனுமதித்தான்.

உமார் தொடர்ந்து பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அதிக தூரம் செல்லச் செல்ல ஆபத்துக் குறையும் என்பது அவன் நம்பிக்கை. இரவின் பயணம் நீண்டு கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு நகரத்தின் கோட்டைச் சுவர் அருகிலே வந்தான். அதன் சுற்றுப்புறங்களை நோக்கிய போது அது காஸ்வின் நகரம் என்பது தெரிந்தது.