பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

335


அவனுக்காகப் பலவகையான பழங்களும் உணவுப் பொருள்களும் வாங்கி வைத்துக்கொண்டு அவள் காத்திருந்தாள். அவனோ, அவற்றை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல், உட்கார்ந்து கவிதை எழுதத் தொடங்கினான்.

அவள் கோபத்துடன் கண்ணை மூடிக்கொண்டு அவன் அருகிலேயே நீட்டிப் படுத்துவிட்டாள். நான்கு வரிகள் எழுதிமுடித்த அவன் அவளை நோக்கினான். புதிய உடையணிந்து முகத்திற்குப் பூச்சுப்பூசி, சொர்க்கத்துப் பறவைபோலத் தோன்றினாள். அவளுடைய அதிசய அழகு அவன் உள்ளத்தை என்னவோ செய்தது, எழுதிய தாளை வைத்துவிட்டுக் குனிந்து அவளுடைய உதடுகளிலே தன் உதடுகளைப் பதித்தான். அவன் எழுப்பியது இச் என்ற ஒரே ஓர் ஒலி. ஆனால் எழுந்ததோ பலப்பல ஒலிகள். ஆம்! பதிலுக்கு முத்தமிட்டு அவள், அவன் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

அவனும் தன்னை மறந்தான். அயீஷாவினுடைய கண்கள் தூரத்திலே காற்றிலே பறந்து படபடத்துச் சென்று கொண்டிருந்த கவிதைத் தாளை வெற்றியுடன் உற்று நோக்கின.

உமாரின் அருகிலே படுத்திருந்த அயீஷா புரண்டு படுத்தாள். ஏதோ அரவம் கேட்பதுபோல் இருந்தது. அவளுக்கு மிக அருகாமையிலே, யாரோ மூன்றாவது ஆசாமி ஒருவன் மூச்சுவிடுவது போல் இருந்தது அவளுடைய மூக்கில் ஏதோ ஒரு மாதிரியான வாசம் படுவதுபோல் இருந்தது. அவளுடைய உடல் பயத்தால் வெடவெடத்தது. புதருக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்த புள்ளிமான் துள்ளிப் பாய்வதுபோல, அலறித் துடித்துக் கொண்டு எழுந்தாள். வானத்தின் குறுக்கே ஒரு கரிய உருவம் கடந்து போவதுபோல் தெரிந்தது.

அவளுடைய கூச்சலைக் கேட்டு எழுந்த உமார், படிக்கட்டு வழியாக ஓர் உருவம் நழுவிச்செல்வதைப் பார்த்தான். சத்தம் போடாமல் தொடர்ந்து சென்று கீழேயுள்ள கூடத்தில் விளக்குகளைக் கொளுத்தினான். வேலைக்காரர்களும் அதற்குள் எழுந்து வந்துவிட்டார்கள். ஆனால் அந்த ஆள் எப்படியோ தப்பிவிட்டான், வாசல் அருகிலே படுத்திருந்த இஷாக் யாருமே