பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

341


‘சொர்க்கமா, சொர்க்கமா?’ என்று கேட்ட குருடன் பேசாமல் இருந்தான். அவன் எதுவும் பேசாமல் போகவே, அராபியன் கதவைத் திறந்தான். இருட்டிலே வழி தெரியாமல் கையைநீட்டிக் கொண்டேபோன அந்த அராபியன் ஒரு திரை தட்டுப்படவே அதை இழுத்து அகற்றினான். உடனே அவன் முகத்துக்கு நேரே ஒரு மெழுகுவர்த்தி நீட்டப்பட்டது. அந்த மெழுகுவர்த்தியை வைத்திருந்த சாமியார் ஒருவன், அந்த அராபியனை நன்றாக உற்று நோக்கிவிட்டுத் திருப்தியடைந்தவனாக உள்ளே செல்ல அனுமதித்துவிட்டு மறுபடியும் திரையை இழுத்துவிட்டு அங்கேயே நின்று கொண்டான். அராபியன் உள்ளே சென்றான்.

அங்கே இருந்தவர்களெல்லாம் ஒரு திரையை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்திலே ஒரு சாமியார் நின்று தன்மாரிலே அடித்துக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்தான். அராபியன் வேடத்திலேயிருந்து உமார் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்தான். அங்கே யாரும் ‘அர்ப்பணம் செய்தவர்கள்’ இல்லை.

எல்லோரும் நகரத்து மக்களே. அவர்களிலே ஒரு சிலர் அரசாங்கப் படைவீரர்கள் இருந்தார்கள். நாலைந்து முல்லாக்கள் கூட இருந்தார்கள். புதுமையான கருத்துக்களை வெளியிட்டால் மறுக்கும் முல்லாக்கள் இப்படிப்பட்ட மாயமான விஷயங்களை ஆலலோடு காண வந்திருக்கிறார்களே என்று எண்ணிய உமாருக்கு வருத்தமாக இருந்தது.

அந்தத் திரையோரத்திலே ஒரு சாமியார் இருந்து, மறைந்துபோன மாவீரன் ஹூசேனுக்காக மாரடித்துக் கொண்டிருந்தான்.

‘ஹுசேன் எவ்வாறு இறந்தான்? வாளால் வெட்டப்பட்டான். அவன் குருதியைத்தரை குடித்துவிட்டது. ஹூசேனுக்காக ‘அனுதாபப்படுங்கள்! இதோ நான் அவனுக்காக மாரடித்துக் கொள்ளுகிறேன்.’

இப்படி மந்திரம் கூறிக்கொண்டே மாரடித்துக் கொண்டான். கூட்டத்தில் இருந்தவர்களும் அவனோடு ஒத்து மாரடித்துக் கொண்டார்கள். அவர்களும் அந்த மந்திரத்தை உச்சரித்தார்கள். ஒரு சிறு கணப்பிலிருந்து கிளம்பியபுகை அறையிலே ஒரு விதமான வாடையையுண்டாக்கியது.