பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342


மாரடித்துச் சுற்றிக்கொண்டிருந்த சாமியார், திடீரென்று சுற்றுவதை நிறுத்திவிட்டு, ‘ஒ! செத்தவன் குரல் பேசுகிறது!’ என்று கூவிக்கொண்டே தன் பின்னால் இருந்த திரையை இழுத்து விட்டான். திரை மறைந்திருந்த இடத்தில் ஒரு சிறு அறை அவர்களுக்குத் தென்பட்டது. அதன் நடுவிலே விளக்குகள் எரிந்தன. அந்த விளக்குகளுக்கு அப்பால் தரையிலே ஒரு பெரிய வெண்கலப் பாத்திரம் இருந்தது. அதிலே பாதிவரை இரத்தம் நிறைந்திருந்தது. அந்த இரத்தத்துக்கு மேலே ஒரு மனிதனுடைய தலை தெரிந்தது.

அந்த தலையோடு நன்றாகச் சிரைக்கப்பட்டிருந்தது. அந்த மண்டையின் கண்கள் முடியிருந்தன, இரத்தத்துக்கு மேலே வெறும் தலையை மட்டும் கண்ட மக்கள் ஆச்சரியத்தால் கூச்சலிட்டார்கள்.

‘அமைதி! அமைதி!’ என்று சாமியார் கூட்டத்தை அடக்கினான்.

அந்தத் தலையின் கண்கள் திறந்து கொண்டன. இடமிருந்து வலம் அது திரும்பிப்பார்த்தது. இந்த பயங்கரக்காட்சியைக் கண்ட கூட்டம் பேச்சு மூச்சற்றுப் பிரமித்துப்போய் இருந்தது.

அந்தத் தலையின் வாயுதடுகள் அசைந்தன. பேசத் தாடங்கின:

‘உண்மையுள்ளவர்களே! கண்ணுக்குத் தெரியாத சொர்க்கத்தின் கதையைக் கேளுங்கள்’ என்று சொல்லித் தான் சொர்க்கத்துக்குப்போன கதையை எடுத்துச் சொல்லியது.

கூட்டத்தில் இருந்த மற்றவர்கள் அதிசயத்தில் மூழ்கியிருந்தார்கள். ஆனால், உமார் ஆராய்ச்சிசெய்து காண்டிருந்தான். குரல், அந்தத் தலையின் தொண்டையிலிருந்துதான் வந்தது.

ஆனால், அந்தத்தலை நிச்சயமாக உயிருள்ள மனிதனுடைய தலையே என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிந்தது. தந்திரமாக அந்த மனிதனுடைய உடலை மறைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.

முடிந்ததும் அந்த சாமியார் திரையை இழுத்து மறைத்து விட்டான்.