பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

வந்தார்கள். ‘இரத்தம் இருக்கிறது; தலை இப்பொழுதுதான் வெட்டப்பட்டிருக்கிறது; ஆனால், உடலை எங்கும் காணவில்லையே’ என்று சிப்பாய் தேடினான். கையிலிருந்த விளக்கின் வெளிச்சம் ‘அர்ப்பணம் செய்தவர்கள்’ உடையில் இருந்த ஒரு முண்டத்தின் மேல்பட்டது. அந்த முண்டம் படிக்கட்டின் கீழே கிடந்தது. உள்ளேயுள்ள நிலவறைகளிலே புகுந்து பார்த்தபோது, ஓர் அறையிலே ஐந்து முண்டங்கள் கிடந்தன. தலைகளைக் காணவில்லை. ஒரு முல்லா அந்த முண்டங்களின் ஆடையைப் பார்த்து, ‘காணாமற்போன ஐந்து, வணிகர்களின் இவை யென்று அடையாளம் கூறினார். ‘அந்தக் கொலைகார நாய்களைப் பிடியுங்கள்’ என்று கூவினார். கூட்டம் அவர்களைத் தேடியது.

ஆனால், அந்த மாயவாதிகள் இந்நேரம் எங்கே ஓடி ஒளிந்தார்களோ அந்தக் குருடன் மட்டும் ‘கூட்டாளிகளே! என்னை விட்டுவிட்டுப் போகாதீர்கள்!’ என்று கத்திக் கொண்டு வாசற்படியிலே இருந்தான்.

உமாருக்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. உயிர்த்துணையாக இருந்து இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்ட அந்த ஜபாரக்கின் சாவு அவன் மனத்தைவிட்டுப் போகவில்லை.


43. தலையிட்டால் கொலை நடக்கும்!

அடுத்த நாள் காலையில் ஊர் முழுவதும் இரவு நிகழ்ச்சியைப் பற்றிய பேச்சாகவேயிருந்தது. உண்மையான மதப்பற்றும், அரச பக்தியும் அரசாங்க நலன் கருதும் எண்ணமுமுள்ள ஊழியரான நிசாம் அல்முல்க் அவர்கள், தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதையும் பொருட்படுத்தாமல், சுல்தான் மாலிக்ஷா அவர்களின் இருப்பிடத்திற்கு வந்தார்.

‘என் சுல்தான் அவர்களே! கட்டளையிடுங்கள்! அந்தக் கொலைகாரர்களான ஏழாவது கொள்கைக்காரர்களை வேட்டையாடி, நம் சாம்ராஜ்யத்திலேயே இல்லாமல் தொலைத்து விடுகிறேன். தங்கள் நிழலில் வாழ்வோரிடமே கப்பம் வசூலித்துக் கொண்டு, தங்களுக்கு அறைகூவும் அவர்கள் தலைவன் என்ன ஆகிறானென்று பார்க்கலாம்!’ என்று இறைஞ்சினார்.