பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

347

கோட்டைக்குள்ளேயே இருப்பதாக மற்றவர்களை நம்பவைத்தான். அவனுடைய ஆட்கள், நாடெங்கும், புதிய தூதர் மாறிவரும் நாள் ருங்கிவிட்டதென்று தங்கள் பொய்ப் பிரசாரங்களை நடத்தினார்கள்.

மாலிக்ஷாதான் நிசாமை ஆள் வைத்துக் கொன்றுவிட்டார் என்று சிலர் பேசினார்கள். ஏதோ தெய்வீக சக்திதான் தன் தூதனையனுப்பிக் கொன்றுவிட்டதென்று சிலர் கூறினார்கள்.

நாடெங்கும் பலப்பல வதந்திகள் உலவத் தொடங்கின.


44. உலகம் சுற்றவில்லை; உமார், உளறாதே!

விண்மீன் வீட்டிற்கு உமார் திரும்பியதைக் கண்டு, அங்கிருந்த பேராசிரியர்கள் தங்கள் தலைவன் திரும்பிவந்ததற்காக மகிழ்ந்தார்கள்.

உமார் தான் செய்யப்போகும் புதிய ஆராய்ச்சியைப்பற்றி விளக்கிக் கூறியபோது அவர்கள், ‘இது என்ன சாதாரண விஷயம்! இதிலே ஒன்றும் அதிசயமில்லை. விளையாடும் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இது அதிசயமாகத் தென்படலாம்’ என்று கூறினார்கள்.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வானவெளியில் சுற்றி வருகிறது என்ற உண்மை அவர்களுக்குப் புரிவதற்கு வெகு நேரமாகவில்லை, அவர்கள் இந்த விஷயத்தைச் சிறு குழந்தைகள் கூடப்புரிந்து கொள்ளும் என்றார்கள்.

ஆனால் அதை நிரூபிக்க உமார் மிகுந்த உழைப்பைக் கைக்கொண்டான். தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தின் வட்டச் சுவரிலே, வானத்தில் உள்ள இராசிகளின் அடையாளங்களை வரிசையாக எழுதச் செய்தான். அந்தக் கூடத்தின் தளத்தைத் தோண்டியெடுத்து நட்டநடுவிலே ஒரு பெரிய மரத்துணும், அந்தத் துணோடு சேர்ந்த ஒரு வட்டமேடையும் அமைக்கச் செய்தான்.

அந்த மேடைக்குக் கீழே ஆட்கள் நின்று தூணிலே பொருத்தப்பட்டிருக்கும் கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டு சுற்றினால் அந்த வட்டமேடையும் சுற்றும்படியாக ஓர் இயந்திரம்போல அமைத்தான்.