பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

தோள்பட்டைகள், புடைத்துச் சுருண்டு கட்டியாகி வீங்கியிருந்தன. கருப்புக் குல்லாயுடன் பழுப்பு நிறங்கொண்டு விளங்கிய அவன், அரண்மனைக் காவலாள் போல் தோன்றினான்.

“சுல்தான் எங்கேயிருக்கிறார்? என படைத் தலைவர்களின் பக்கம் திரும்பி கேட்டான் ரஹீம்.

“அல்லாஹீ! அதோ படைவீரர்களுக்கெல்லாம் முன்னாலே போகிறாரே அவர்தான்!”

சுல்தான் என்றால், பட்டாடை காற்றில் பறக்க பாய்ந்துவரும் குதிரைமேல் ஏறிப் பவிசாக அலங்காரத் தலைக்கவசம் அணிந்து பறக்கும் கொடிகளும் முழங்கும் முரசும் சூழ்ந்துவர வருவார் என்று ரஹீம் எண்ணிக் கொண்டிருந்தான். சாதாரண மனிதனைப் போல் தோன்றிய அந்தச் சுல்தானைப் பார்க்க அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. பேசாமல் அவனுடைய இடத்திற்குத் திரும்பிச் சென்றான்.

நடுப்பகலிலே, அலுப்பும் பசியுமாக அவன் இருந்தபோது உமார் அவனை அழைத்தான்.

“ரஹீம் ! போர் நம்மை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. நான் துருக்கியர்களுடன், மணல் மேட்டிலிருந்து கவனித்தேன். இங்கே வா” என்று அழைத்தான்.

அவர்கள் இருவரும், சுல்தான் கடந்துபோன அந்த மணல் மேட்டின் உச்சியில் ஏறி நின்று பார்த்தபோது ஆயிரக்கணக்கான தேன் கூடுகளிலிருந்து எழும் ஒசை காதில் வீழ்ந்தது. குதிரைக் குளம்படிகளின் சத்தமும், வாட்படையும், பிற படைகளும் மோதும் ஓசையும் மிக மென்மையாக இருந்தன. சூரிய வெளிச்சம் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் தெளிவாகப்பட்டு அங்கே நடந்த காட்சியை விளக்கமாக எடுத்துக் காட்டியது.

நகர்ந்து கொண்டிருக்கும் குதிரைப்படைகளும் பொருதிக் கொண்டிருக்கும் வீரர்களும், உயரத்திலிருந்து பார்ப்பதற்கு மிகமிகச் சிறிய உருவங்களாகத் தெரிந்தன. சில சமயங்களில் அவை மிக மெதுவாகவே நகர்ந்தன. ஆடு மாடுகள் புல் மேய்வதைப் போல், சாவதானமாக நகர்ந்து கொண்டிருக்கும் படைகள், சில சமயங்களில், புயல் காற்றடிப்பது போல் வெகு வேகமாகப் பாய்வதையும், ஓடுவதையும் கூடப் பார்க்க முடிந்தது.