பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352


‘உமார்! பைத்தியக்காரத்தனமாகப் பேசாதே! சிறு குழந்தைகளும் கவிஞர்களும்தான் இப்படிப் பேசுவார்கள். விரைவில் கடவுள் உனக்கு நல்லறிவு தர வேண்டுமென்று நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு, காசாலி போய்விட்டான்.

‘தலைவரே ! காரியம் கெட்டுவிட்டது. தாங்கள், இஸ்லாத்தின் சான்றைத் தலைகுனியவைக்க முயற்சித்ததாக நிசாப்பூர் முழுவதும் கதை பரவப்போகிறது. தாங்கள் கல்லூரிக்குச் செல்லாதீர்கள், ஏதேனும் தீங்கு விளையலாம். விதி எப்படி எழுதியிருக்கிறதோ?’ என்று உமாரின் உதவியாராய்ச்சியாளர் ஒருவர் எச்சரித்தார்.

‘விதியின் பேனா ஒன்றை எழுதிவிட்டால் - அது உனக்காகவும் எனக்காகவும் அழிக்கப்பட மாட்டாது. நடப்பது நடக்கட்டும்’ என்றான் உமார்.


45. எரியும் நெருப்பைத் தனிப்பது மதுவே!

சாம்ராஜ்யமெங்கும் இந்தச் செய்தி பரவியது. இஸ்லாத்தின் சான்றை அரசனுடைய வானசாஸ்திரி போட்டிக்கு அழைத்ததாகவும், யாரிடம் சக்தி அதிகம் என்று பந்தயம் போட்டதாகவும், மாய தந்திரத்தினால். உமார் காசாலியை மடக்க முயற்சித்ததாகவும், ஆனால், காசாலி, திருக்குரான் வாக்கியங்களை ஓதி, உமாரை அவமானமடையச் செய்து தன் சக்தியை நிலைநாட்டி விட்டதாகவும், அங்காடிச் சந்தைகளிலே மக்கள் பேசிக் கொண்டார்கள்.

ஆனால், உமார் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தான். இந்தச் செய்திகள் அனைத்தும் கூடுதலாகவும் குறைத்தும் இஷாக் மூலமாக அயீஷா தெரிந்து கொண்டாள்.

ஒருநாள் நிசாப்பூரிலிருந்து நாலாதிசைகளிலும் உள்ள பல நகரங்களுக்கும் தபால் குதிரைகள் கனவேகமாகப் பறந்தன. தூசி கிளப்பிக் கொண்டு பாய்ந்து செல்லும் செய்தியாளர்களை அங்கங்ளேயுள்ள மக்கள் என்ன செய்தியென்று கேட்டார்கள்.