பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

355


சபை நடுவில் தனக்காக ஒதுக்கப் பெற்ற சிறிய இடத்திலே, உமார் நீதிபதிகளின் முன்னாலே மண்டியிட்டு அமர்ந்திருந்தான்.

உமாரை அழைத்தபோது அவர்கள் காரணம் எதுவும் சொல்லிவிடவில்லை. ஆனால், சபைக்குள்ளே நுழைந்ததுமே அவன் தன்னை விசாரிக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டான். அங்கு கூடியிருந்தவர்களுடைய தோற்றமே அதை எடுத்துக்கூறியது, சுற்றியிருந்தவர்களுடைய முகத்திலே அத்தனை நாளும் உள்ளத்துக்குள்ளே மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்த அத்தனை வெறுப்பும் வெளிப்பட்டுக் காட்சியளித்தது.

‘பிஸ்மில்லா அர்ரஹ்மான் அர்ரஹீம் கருணையும் இரக்கமும் கொண்ட அல்லாவின் பெயரால்’ என்று வயது முதிர்ந்த ஒரு நீதிபதி எழுந்து கூறினார்.

அடுத்து ஒரு முல்லா, எழுந்து உமாரின்மேல் உள்ள குற்றச்சாட்டுகளைப் படித்தார்.

கேள்வி கேட்பாரற்ற முறையிலே மத விரோதிகளான கிரேக்கர்களின் போதனையின்படி, மத நம்பிக்கையில்லாத இந்த ஆசிரியரால் இயற்றப்பட்ட புத்தகங்களுக்கு முதல் நீதி வழங்கவேண்டும். ஏனெனில் அவை தற்பொழுது, இஸ்லாமிய தேசம்முழுவதும், பள்ளிகளிலே பயிலப்பட்டு வருகின்றன.

பலப்பல விஷயங்களிலே இருந்தும் இவன் மத மறுப்புவாதி என்பது தெளிவாகத் தெரிகிறது. முதலாவதாக, இஸ்லாத்தின் சரியான பஞ்சாங்கத்தை ஒதுக்கிவிட்டு, மத விரோதிகளின் மனப்போக்கின்படி காலத்தைப் புதிதாக அளந்து, புதிய பஞ்சாங்கத்தை நாட்டில் ஏற்படுத்தும்படி சுல்தானைக் கட்டாயப்படுத்தியது ஒரு குற்றம்.

அடுத்துத் தன்னுடைய ஆராய்ச்சிக்கூடத்தை இடுகாட்டின் அருகிலே வைத்துக்கொண்டு, புதைகுழிகளுக்கிடையே அடிக்கடி சென்று இறந்தவர்களின் ஆவிகளோடு தொடர்பு கொண்டது ஒரு குற்றம்.

அடுத்து, ஆண்டவனுடைய அருள்வாக்கை மறுத்து வானவீதியின் மத்தியில் பூமி அமைந்திருக்கவில்லை என்றும், முகமது பெருமான், தோன்றி மறைவதாகக் கூறிய