பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது, உமாருக்குப் பார்த்த இடமெல்லாம் குழப்பமாகவேயிருந்தது. ஒரு குதிரை வீரனின் தலைப்பாகை சரியாகக் கட்டப்படாமல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. ஒரு மனிதன் வாயைத் திறந்தபடியே, வெறுங்காலால் ஓடிக் கொண்டிருந்தான். ஒரு வண்டி கவிழ்ந்து கொண்டிருந்தது. அதன் கீழே, ஒரு குடியானவன் நசுங்கிக் கிடந்தான்.

திடீரென்று ஒரு பக்கத்திலே ஒரு மனிதன், மண்டியிட்டு ஊர்ந்து வருவது தெரிந்தது. காயமடைந்திருந்த அவன் அருகிலே குதிரையை நிறுத்தித் தன் கைவேலால் அவனைக் குத்தினான், ஒருவீரன். அந்த வேல், கவசத்தைத் துளைத்துக் கொண்டு அவனுடைய உடலிலே, ஆழப் பதிந்தது. அவன் வாய்வழியாக, குருதி கொட்டித் தலைசாய்ந்து, கீழே விழுந்தான். அப்படியிருந்துங்கூட அவன் உடல் நகர முயற்சித்துக் கொண்டிருந்தது. அப்படிச் செத்து வீழ்ந்த வீரனை உமார் ஆச்சரியத்தோடு உற்று நோக்கினான். அவன் ஒரு கிறிஸ்தவ வீரன் போல் இருந்தது.

ரஹீம் எங்கே இருக்கிறான் என்று தெரிந்து கொள்வதற்காகத் திரும்பிப்பார்த்தான் உமார். தலைப்பாகை சரியாகக் கட்டாமல் வந்து கொண்டிருந்த வீரன், தன் இடுப்பிலே பாய்ந்த ஓர் அம்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வலிதாங்காமல் முனகிக் கொண்டிருந்ததைக் கண்டான்.

குதிரைகள் போய்க் கொண்டேயிருந்த பாதையில் இங்குமங்கும் கூடாரங்கன் தெரிந்தன. இரும்புகள் மோதும் சத்தமும், அலறும் ஒலியும் எழுந்தன. தன்னுடைய குதிரை நுரை தள்ளிக் கொண்டிருப்பதைக் கண்ட உமார் தன் கடிவாளத்தைத் தளர்த்தினான்.

இவ்வளவு நேரமும் போர்க்களத்தின் உள்ளே சண்டையின் மத்தியிலே புகுந்து வந்திருக்கும் தான் அதையுணராமலும், உறையில் இருந்த வாளை உருவாமலும் இருந்தது நினைப்புக்கு வந்தபோது உமாருக்குச் சிரிப்பாய் வந்தது. ஒரு பெரிய கூடாரத்தின் அருகிலே ரஹீம் நின்று கொண்டிருந்தான். அவனைச்சுற்றி எங்கும் நிறைந்திருந்த கொரசானியர்கள் கூடாரங்களுக்குள் ஏதும் பொருள்கள் கிடைக்குமா என்று தேடிப்