பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

ஆண்டுகள், பலவிதமான செயல்களும் நடத்தப்படும் பூமியின் கீழே அவன் படுத்துக் கிடக்க வேண்டும். தீர்ப்பு நாள் வந்து ஒவ்வோர் ஆத்மாவும் அதனதன் உடலிலே சேர்ந்து கொள்ளும் வரையிலே, பார்வைக்கெட்டாத திரைமறைவிலே ரஹீம் காத்துக் கொண்டு கிடக்க வேண்டும். கன்னத்தில் கைவைத்தபடி விடியுமட்டும் உட்கார்ந்திருந்தான் உமார். கடந்த இரண்டு நாள் அலைச்சலும் இப்போது இல்லாமல் இருந்தது, தவிர அவன் மனம் முழுவதும் துன்பத்திலாழ்ந்திருந்தது.

“ரஹீம்! உன்னுடைய உடல் ஒரு கூடாரம் போன்றது. உன் உயிர் அதிலே வந்து சில நாள் தங்கியிருந்தது. கூடாரம் தாக்கப்பட்டுவிட்டது, தன்னுடைய நெடும் பயணத்தைத் தொடங்கிவிட்டது. அந்தப் பயணத்திலே விரைவில் நானும் கலந்து கொண்டு உன்னைக் காண வருவேன்” என்று உமார் புலம்பினான்.

“ஆமென்! அமைதியுண்டாகட்டும்!” என்று யார்மார்க் உடன் மொழிந்தான்.

கூடாரத்திற்குள்ளே ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அதை விழித்துப் பார்த்துக் கொண்டு உமார் உட்கார்ந்திருந்தான். ஒரு மூலையிலே கிடந்த ஆடைகளின் மத்தியிலே தூங்கிக் கொண்டிருந்த அந்த ரோமானியப் பெண் எழுந்து ஒரு ஜாடியிலிருந்த திராட்சை மதுவை ஒரு கண்ணாடிக் குவளையிலே ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள். உமார் அதை உதறித் தரையிலே தள்ளுவதற்காகத் தன் கையை ஓங்கினான். நிசாப்பூர் வீதியில் உள்ள சத்திரத்தில், அவனும் ரஹீமும் ஒன்றாகப் பேசிக் கொண்டிருந்தபோது, ரஹீம் அவனுக்கு மது ஊற்றிக் கொடுத்த காட்சி நினைவுக்கு வந்தது. அவன் அவளிடமிருந்து அந்தக் குவளையை வாங்கி அதில் இருந்த மதுவைக் குடித்தான். குளிர்ந்திருந்த அவனுடைய உடலிலே ஒருவிதமான கதகதப்பு உண்டாகியது. உமார் குடிக்கக் குடிக்க அந்தப் பெண் குவளையை நிரப்பிக் கொண்டேயிருந்தாள். அலுப்பு மிகுதியால் பெருமூச்சு விட்டுக்கொண்டே உமார் துணிக் குவியலின் மேல்படுத்து உறங்கத் தொடங்கினான்.

மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு அவன் அருகிலே உட்கார்ந்து கொண்டு வானம் வெளுத்து வருவதைக்