பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

கவனித்துக் கொண்டிருந்தாள். எல்லாம் தெளிவாகத் தெரியும், அளவு வெளிச்சம் வந்ததும் ஒரு வெண்கலக் கண்ணாடியை எடுத்து வைத்துக் கொண்டு அவள் அதில் தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டே தலையை வாரிவிட்டுக் கொண்டாள். ஒரே இரவிலே தன்னுடைய எஜமானர்களை மாற்றிக் கொள்ளுவது அவளுக்குப் புதிதல்ல பழக்கமான விஷயந்தான்.


6. பகைவனுக்கருளும் பண்புள்ள சுல்தான்!

அந்த மலைப் பள்ளத்தாக்கின் மறு கோடியிலே சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்களுடைய கூடாரம் அடிக்கப்பட்டது.

அந்தக் கூடாரத்தின் வாசலிலே துருக்கி அமீர்கள் கூட்டங் கூட்டமாக வந்து நுழைந்தார்கள். மத்தியிலே விரிக்கப்பட்டிருந்த நடை பாதைச் சமுக்காளத்தின் இருபக்கத்திலும் பலர் குழுமியிருந்தார்கள். நடைபாதைச் சமுக்காளத்தின் ஒரு கோடியிலே இருந்த மூன்று பேரையும் பார்ப்பதற்காக அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் இடித்துக் கொண்டும் தோளுக்குமேல் எட்டிப்பார்த்துக் கொண்டும் நின்றார்கள். அந்த மூன்று பேரும் யார் என்றால், ரோமானஸ் டயஜீன்ஸ் என்ற ரோமானியர்களின் பேரரசர். அந்தப் பேரரசர், போர்க்களத்தில் அடிபட்டு முர்ச்சையுற்றுக் கிடந்தபோது, அவரைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்து, சுல்தான் காலடியிலே ஒப்படைத்த ஒரு முஸ்லிம் அடிமை, சுல்தான் ஆல்ப் அர்சலான் ஆகியோர்தாம்.

ரோமானஸ் என்ற கிறிஸ்தவப் பேரரசன், சுல்தான் அவர்களின் முன்னாலே மண்டியிட்டு வணங்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டார். தலைகுனிந்த தன்னுடைய அரசியல் கைதியின் கழுத்தின்மேலே தன் காலடியைத் தூக்கி ஒருமுறை வைத்தெடுத்த பிறகு அவரை வலப்புறத்திலேயிருந்த ஆசனமெத்தையொன்றில் அமர வைத்தார் சுல்தான். கிழக்கையும் மேற்கையும் ஆளும் அந்தப் பேரரசர்கள் இருவரும் முதன்முதலாக நேருக்கு நேராகப் பேசிக்கொள்வதைப் பார்க்க அங்கு கூடியிருந்தவர்கள் மிக ஆவலாக இருந்தார்கள். சுல்தான் ஆல்ப் அர்சலான், அரசியல் கைதியான அந்தக் கிறிஸ்துவப் பேரரசர் ரோமானஸைப் பார்த்துக்கேட்டார்: “நான்