பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

உம்முடைய கைதியாக்கப்பட்டு உம் முன்னாலே கொண்டு வந்து நிறுத்தப்பட்டால், நீர் என்னிடம் எவ்வாறு நடந்து கொள்வீர்? சொல்லும்” . இதுதான் அவருடைய கேள்வி.

கேள்வி மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டதும் ரோமானஸ் சற்றுத் தலைநிமிர்ந்து சிரித்துவிட்டு “தங்களை மிகக் கொடுமையாக நடத்துவேன்” என்றார்.

சுல்தான் அவர்களின் இருண்ட முகத்திலே ஒரு புன்னகை மின்னியது. “இப்பொழுது நான் உம்மை என்ன செய்வேன் என்று எதிர்பார்க்கிறீர்? என்று மறுபடியும் கேட்டார்.

பிடிபட்ட அந்தக் கிறிஸ்துவச் சக்கரவர்த்தி, கூர்மையான தன் எதிரிகளின் முகங்களை ஒருமுறை கவனித்துவிட்டு ஒரு தீர்மானத்திற்கு வந்து பதில் கூறினார்.

“இந்த இடத்திலேயே தாங்கள் என்னை வாளால் சீவிக் கொன்றுவிடலாம், அல்லது தங்களுடைய நாட்டுக்கு என்னை இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து அழைத்துக்கொண்டு போகலாம், அல்லது என்னிடமிருந்து விடுதலைப் பணம் பெற்றுக் கொண்டு விடுவிக்கலாம். இம்மூன்றில் எதையாவது செய்வீர்களென்றுதான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

இந்தக் கிறிஸ்தவச் சக்கரவர்த்தியின் வார்த்தைகள் ஆல்ப் அர்சலான் அவர்களின் உள்ளத்திலே ஒரு விருப்பத்தை உண்டாக்கின. ஆண்மை குறையாத ஒருவனைத் தாம் அடிமைப்படுத்தியதை நினைக்க அவருக்குப் பெருமிதமாக இருந்தது. ரோமாபுரியின் சீஸர் ஒருவனுடைய கழுத்திலே தாம் காலடிவைக்க நேர்ந்தது, அவருக்குப் பெருமையாக இருந்தது.

“நான் உம்மை என்ன செய்வதென்று முடிவு செய்துவிட்டேன், என்ன தெரியுமா? என்று சுல்தான் அவர்கள் கேட்டவுடனே, தகப்பனாருக்குப் பின்னாலே வீற்றிருந்த இளஞ்சிங்கம் முன்னாலே நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய கைகள் இடுப்பைத் தடவின. முஸ்லீம்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் இரண்டு அரசர்களுமே இறந்து போவார்களென்றும், சோதிடம் சொல்லப்பட்டதை அவன் மறக்கவில்லை.

சுல்தான் தான் சொல்ல வந்ததைத் தொடர்ந்து “உம்மிடமிருந்து நான் விடுதலைப் பணம் பெற்றுக் கொண்டு,