பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

இருந்தது. அதை மறப்பதற்காகத் தன் கவனத்தை வேறுவழியில் திருப்ப வேண்டுமென்று நினைத்துக் கணிதப் பேராசிரியர் அலி அவர்களிடம் வந்து அவருடைய மாணவனாக அவருடைய மாளிகையிலே தங்கியிருந்தான்.

பேராசிரியர் அலி அவர்களுக்கு எழுபத்து மூன்று வயதாகிவிட்டது. பழுத்த கிழவர், “ஞானக்கண்ணாடி’ என்ற பட்டப் பெயரால் பலராலும் சிறப்பிக்கப்படுபவர். சுல்தான் அரண்மனையிலுள்ள அமைச்சர்கள் ஆதரவால் அவர் வாழ்ந்து வந்தார். புனித நூலாகிய திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக, அவர் மனப்பூர்வமாகவும் உயிருக்குயிராகவும் விரும்புவது கணிதநூல் ஆகும். அவருடைய வீட்டில் எல்லாச்செயல்களும் மணிப்படிதான் நடக்கும். மணி அறிந்து கொள்வதற்காக முன் கூடத்தில் மீன் தொட்டிக்கு அருகில் ஒரு நீர்க்கடிகாரம் அமைக்கப்பட்டிருந்தது.

அவருடைய உதவியாட்கள், அவருடைய வேலைகளை நேரத்தைப் பார்த்தே கணக்குச் செய்து விடுவார்கள். இத்தனை மணியாகியதால் ஆசிரியர் குளித்துக் கொண்டிருப்பார்; இப்பொழுது படித்துக் கொண்டிருப்பார், இந்நேரம் எழுதிக் கொண்டிருப்பார், இந்தச்சமயம் சாப்பாடு நடந்து, கொண்டிருக்கும் என்று கணக்காகச் சொல்லிவிடுவார்கள்.

வானவெளியிலுள்ள கோளங்கள் கணக்காகச் சுழல்வது போல் பேராசிரியர் அலி அவர்களின் வீட்டில் நீர்க்கடிகாரப்படி, ஜந்து வேளைத் தொழுகையும், இரண்டு வேளைச் சாப்பாடும். பனிரெண்டு மணிநேர வேலையும் மாறிமாறி நடந்து கொண்டிருக்கும். அவர் தம் மாணவர்களுக்குப் போடும் சாப்பாட்டில்கூட எந்தவிதமான மாற்றமும் கிடையாது. எப்படித் தினந்தினமும் ஒரே கதிரவன் உதிக்கிறானோ, அது போலவே தினந்தினமும் ஒரேவிதமான சாப்பாடும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்!

பேராசிரியர் அலி சில சமயங்களில் நிஜாப்பூர் பட்டணத்திற்குக் கிளம்பிப்போவதுண்டு. அப்பொழுது அவர்தம் பதவிக்குத் தகுந்த ஆடம்பரமான பழுப்புநிற உடையணிந்து கொண்டிருப்பார். ஒரு மட்டக் குதிரையின்மேல் சவாரி செய்து கொண்டு போவார். சின்னப் பட்டுக் குடையொன்று வெயிலை