பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

“எல்லாம் அல்லாவினால்தான் முடியும் என்பது என் நம்பிக்கை, என்னுடைய சிற்றறிவு, கணித நூல் ஆராய்ச்சியைச் செய்து முடிப்பதிலேதான் ஈடுபட்டிருக்கிறது” என்று மழுப்பினார் ஆசிரியர்.

“நடக்கப் போகும் மூன்று விஷயங்களைப் பற்றி ஒருவன் முன்கூட்டியே சோதிடத்தின் மூலம் குறி சொல்கிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். அந்த மூன்று விஷயங்களும் தற்செயலாகவே நிறைவேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? உங்கள் அறிவுக்கு என்ன தோன்றுகிறது என்பதையே அறிய விரும்புகிறேன்” என்றான் டுன்டுஷ்.

“மூன்று விஷயங்களில் இரண்டு தற்செயலாக நடந்து விடலாம். ஆனால் மூன்றாவது நடக்கவே நடக்காது. எந்தச் சோதிடனும் மூன்று விஷயங்களைச் சேர்த்து முட்டாள் தனமாகச் சொல்லவே மாட்டான்” என்றார் அலி.

“அப்படிப்பட்ட சோதிடன் உங்கள் மாணவர்களிலேயே ஒருவன் இருக்கிறானே! சற்றுமுன் நாம் பேசிக் கொண்டிருந்தோமே; அவன்தான்” என்று டுன்டுஷ் கூறியதும், “உமாரா? அவன் செய்ய வேண்டியது அது ஒன்றுதான் பாக்கியிருக்கிறது” என்றார் அலி.

“அட; கடவுளே! வேறு என்ன என்ன செய்கிறான்? என்று டுன்டுஷ் கேட்டான்.

“பட்டு நூல்களில் கோர்த்த தந்த மணிகளை உன் விரல்களினால் எவ்வளவு எளிதாகத் தள்ளுகிறாயோ அவ்வளவு எளிதாக அவன் கன அளவுக் கணிதங்களைச் செய்து விடுகிறான்”.

“அப்படியானால் அவனிடம் ஏதோ ஒரு திறமையிருக்கிறது. ஓய்வு நேரத்தில் அவன் என்ன செய்கிறான்?”

“என் புத்தகங்கள் எல்லாவற்றையும் படிக்கிறான். பாலைவனத்தின் ஓரத்திலேதான் தன்னந் தனியாகச் சுற்றுகிறான். பழங்கள் சாப்பிடுகிறான்; சொக்கட்டான் ஆடுகிறான். தான் செய்யும் கணிதங்களை ஒரு பெட்டிக்குள்ளே ஒளித்து