பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வைத்திருக்கிறான்!” என்று வேண்டா வெறுப்புடன் அடுக்கிக் கொண்டே போனார் ஆசிரியர்.

“பாலைவனத்தில் தனியாக ஒருவன் ஏன் நடந்து செல்ல வேண்டும்? உங்கள் பகுதியிலே யாரும் அழகிய, பெண்கள் மேல் மையல் கொண்டு சுற்றுகிறானா?”

“சொறி பிடித்த சலவைக்காரிகளைத் தவிர வேறு பெண்கள் இந்த பகுதியில் கிடையாது”.

உங்கள் மாணவன் உமார் கயாம் ஒரு விசித்திரமான ஆள்தான்! அவனுடைய ஆற்றல் கண்ணுக்குத் தெரியாத தேவதூதர்களின் சக்தியால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது பேய், பிசாசுகளின் செயலாக இருக்க வேண்டும். பேய்களின் கலையை மறைமுகமாகப் பயில்கின்ற அந்தப் பையனைத் தாங்கள் கவனித்து வரவேண்டும். அவனைப் பற்றிய விஷயங்களைக் குறித்து, ஒரு மாதம் ஆன பிறகு, குறிப்புகள் உள்ள தங்கள் தாள்களை உறையிலிட்டு மூடி முத்திரை வைத்து, அவன் கையிலே கொடுத்து, நிசாப்பூரிலுள்ள தாக்கின் வாசலில் வெள்ளிக்கிழமை மாலை என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு எழுந்த டுன்டுஷ், “அறிவைத் தேடிக் கொண்டிருக்கும் நான் அறிவின் இருப்பிடமாகிய தங்களை விட்டுப் பிரிய நேரிடுவதற்காக வருந்துகிறேன்” என்று சொல்லி விட்டு வெளியேறினான்.


10. அதிசயத் திறமைக்கு அத்தாட்சிக் கடிதம்!

ஒரு மாதம் ஆன பிறகும்கூட உமாரைப் பற்றிய எந்த விதமான இரகசியத்தையும் பேராசிரியரால் கண்டு பிடிக்க முடியவில்லை. தம் மாணவன் அடையாள முறைக் கணிதத்திற்கு மாறுபாடாக இருப்பதன் காரணமும், புதுவிதமான கணக்குகளுக்கு விடை கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள காரணமும் என்னவென்பது அவருக்குப் புரியவில்லை. எந்தவிதமான குறளி வித்தையையும் கையாண்டு, அவன் கணிதங்களைச் செய்யவில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. பேயோ, பிசாசோ, கண்ணுக்குத் தெரியாத எந்தப் பொருளோ, அவனுக்கு உதவி செய்யவில்லை என்பதிலும் அவனுடைய சொந்த மூளையைப் பயன்படுத்தியே கணித முறைகளைக் கண்டு