பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

பிடித்து விடை காண்கிறான் என்பதிலும் அவர் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்தார். எந்தவிதமான முடிவுக்கும் அவரால் வர முடியவில்லை.

திடீரென்று ஒருநாள், உமாரை அவர் சோதிக்கத் தொடங்கினார். “அமைச்சரிடம் நீ எப்பொழுது திரும்பிச்செல்லப் போகிறாய்?” என்று அவர் கேட்டார்.

“திரும்பிச் செல்வதா? அமைச்சரிடமா? நான் அவரைப் பார்த்ததேயில்லையே!” என்று விழித்துக் கொண்டிருந்தான் உமார்.

“அல்லாவின் ஆணையாகக் கேட்கிறேன், எதற்காக என்னிடம் இத்தனை நாட்களாகத் தங்கியிருந்தாய்?”

“என் நண்பன் ரஹீம் போர்க்களத்தில் மாண்டு விட்டான், அவனுடைய பிரிவை மறப்பதற்காக ஒரு வேலையில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணத்துடன் நிஜாப்பூரை விட்டுப் புறப்பட்டு தங்களிடம் படிக்கவந்தேன்” என்றான் உமார்.

“எந்த விஷயத்தைப் படித்து எப்படிப்பட்ட வேலையில் ஈடுபட நீ எண்ணியிருக்கிறாய்?” என்ற பேராசிரியர் ஒரு நீண்ட பிரசங்கமே செய்யத் தொடங்கிவிட்டார்.

“முதலில் அறிவு எப்படி உண்டாகிறது என்று பார்க்கவேண்டும். தீர்க்க தரிசிகளின் மூலமாக அறிவு இந்தச் சிறிய உலகத்திற்கு இறக்கிகொண்டு வரப்பட்டது. தீர்க்க தரிசிகளிடம் இயற்கையாகவே இருந்து விளங்கிய உள்ளொளியின் உதவியால்தான் காணாத உலகத்திலிருந்து அறிவைக் கல்லும் மண்ணும் நிறைந்த இந்த உலகத்திற்குக் கொண்டு வந்தார்கள். இந்த உலகில் அறிவை உண்டாக்கியவர்கள் தீர்க்கதரிசிகள் என்றால் அதை வளர்த்தவர்கள் தத்துவஞானிகள். தத்துவஞானிகள் தீர்க்கதரிசிகளின் வேத வாக்குகளை ஆராய்ந்து, விஞ்ஞானங்களில் திறமைபெற்று, சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி போதித்தார்கள். அவர்கள் இல்லாவிட்டால் அறிவுக் கலைகள் அனைத்தும் மக்களுக்குத் தெரியாமல் மறைந்து போயிருக்கும்.