பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

மிக உயர்ந்து விளங்கிய அந்த தீர்க்கதரிசிகளைக் காலவரிசை முறைப்படி பார்க்கும்போது முதலாவதாக மூசாநபியும், அடுத்ததாக நாசரி ஈசாநபியும், மூன்றாவதாக முகமது நபி அவர்களும் வருகிறார்கள். தத்துவ ஞானிகளைப் பற்றிப்பேசும்போது அறிஞர்களுக்குள்ளே வேற்றுமையான கருத்துக்கள் நிலவுகின்றன. நான் அறிந்த வரையிலும், பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும், நமது பேரறிஞர் அலி சென்னாவும் மக்கள் உள்ளத்திலே அறிவு விளக்கை ஏற்றி வைத்தவர்கள் ஆவார்கள்.

தத்துவஞானிகளை அடுத்துக் கவிஞர்கள் வருகிறார்கள், கவிஞர்களின் திறமையோ ஆபத்தானதாகும். அவர்கள் தங்கள் அபூர்வமான கற்பனையைப் பயன்படுத்திப் பெரியனவற்றைச் சிறியதாகவும் சிறியனவற்றைப் பெரியனவாகவும் மாற்றியமைத்து விடுவார்கள். கோபத்தையோ, காதல் உணர்ச்சியையோ தூண்டி விடுவதன் மூலம் விருப்பையும் வெறுப்பையும் வளர்த்து உலகில் பெரியனவும் சிறியனவுமான பொருள்களைப் படைத்து விடுவார்கள்.

கவிஞன் கற்பனையைத் தூண்டி விடுவானே தவிர, அறிவைப் பாகுபடுத்தி விளக்க இயலாதவனாக இருக்கிறான். அதனால் தத்துவவாதியின் திறமையைக் காட்டிலும் அவன் கலை தாழ்ந்திராதுதான். ஆனால் கணித விஞ்ஞானிகள் உழைப்பின் பலனோ அழிவில்லாதது. ஆண்டவன் ஒருவனே உண்மையான நிலையை அடைகிறான். அறியாமை யுலகத்திலிருந்து, அறிவுலகத்திற்குப் போகக்கூடிய பாலத்தைக் கட்டுபவன் கணிதமேதையே! அப்படிப்பட்ட கணிதக் கலையிலே அடையாள முறைக்கணிதமே மிகவும் நன்மை பயப்பது, சிறந்தது, உன்னுடைய திறமை முழுவதையும் நீ அக்கணித முறையில் தேர்ச்சி பெறுவதற்காகப் பயன்படுத்து வாயென்று எதிர்பார்க்கிறேன்.” என்று கூறிமுடித்தார்.

அவர் தன்னிடத்துக் காட்டிய அக்கறை, உமாரின் உள்ளத்தைத் தொட்டது. தன்னுடைய எண்ணத்தை அவரிடம் வெளிப்படுத்தக்கூடிய சொற்களைத் தட்டுத் தடுமாறி நினைவுக்குக் கொண்டு வந்து, “நட்சத்திரங்களின் போக்கை அறிந்து, ஆராய்ந்து விடை காண வேண்டுமென்பது என் ஆசை!” என்று கூறினான்.