பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

“நட்சத்திரங்களைப் பற்றியா? அது சோதிடக்கலையைச் சேர்ந்ததல்லவா? சோதிடமென்பது, கோளங்களுக்கும், மனித காரியங்களுக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றியதல்லவா? அதற்கும் கணிதத்திற்கும் சம்பந்தம் இல்லையே!” என்றார் ஆசிரியர்.

“இருந்தாலும் விஷயம் ஒன்றுதானே!”

“என்ன சொன்னாய்! என் புத்தகத்தில் உள்ள விஷயமும், ராஜ சோதிடனின் கூற்றும் ஒன்றா? அது தவறு. இன்னொரு முறை அதை என் காதில் படும்படி சொல்லாதே”.

“இருந்தாலும், ஒரு கலையின் மூலம் பெறப்படும் உண்மையும், வேறொரு கலையின் மூலம் பெறப்படும் உண்மையும் ஒன்றுதானே?”

“அப்படியல்ல மகனே; இந்த மாதிரியான வீணான எண்ணங்களை யெல்லாம் கொண்டு அவதிப்படாதே. நீ இளைஞன். காலம் வரும்போது அனுபவத்தின் மூலம், ஒரு கலை, மற்றொரு கலையின் பகுதியல்ல என்பதை உணர்ந்து கொள்வாய். கணிதக் கலையொன்றுதான் உண்மையான அறிவையுண்டாக்கக் கூடியது. உன்னுடைய கவனமெல்லாம் அதிலேயே செலுத்தப்பட வேண்டுமென்பதுதான் என் விருப்பம். நாளைக் காலையில் நான் உனக்கொரு கடிதம் தருகிறேன். அதையெடுத்துக் கொண்டு நிஜாப்பூருக்குச் சென்றால், அங்கே உன்னை ஆதரிக்கக்கூடிய ஒருவரைச் சந்திப்பாய். உன் பயணம் வெற்றி பெறுவதாக!” என்று வாழ்த்தினார். உமார், ஆசிரியரிடம் எவ்வளவோ பேச வேண்டுமென்று எண்ணினான். ஆனால், தன் கருத்தை அவரிடம் முழுவதும் விளக்க முடியவில்லையே என்று வருந்தினான். அவரை விட்டு எழுந்து செல்லும் போது, தன் வாழ்வின் மற்றொரு கதவும் அடைப்பட்டுவிட்டதாகத் தோன்றியது. அவன் சென்ற பிறகு பேராசிரியர் அலி, பேனாவும் வெள்ளைத் தாளையும் எடுத்து எழுதத் தொடங்கினார்.

“என்னுடைய மாணவன் உமார்கயாம் பாக்தாதுக் கல்லூரிப் பேராசிரியர் உஸ்தாது அவர்களுக்குச் சமமான திறமையுள்ளவன் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். எந்த