பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

காப்பாற்றும்படி அவனிடம் சொல்லுகிறேன். நீ அதற்குப் பதிலாக அவனுடைய எட்டு குழந்தைகட்டும் புனிதமான கொரான் படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்று கூறினான்.

அவன் பேசிய போக்கும் அலட்சியமான பார்வையும் ஏதோ நாய்க்கு ரொட்டித் துண்டை விண்டுத் தூக்கி எறிவது போல் இருந்தது. உமாரை அவமதிப்பதற்காகவே அவன் பேசியது போலிருந்தது.

உமாருக்கு ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்தது. “இந்த மாதிரியான ஆதரவை எழுதப் படிக்கத் தெரிந்த யாராவது ஒரு காஜாப் பையனுக்குக் கொடுங்கள். ஏழைகளைக் காப்பாற்றும் இதயம் வாய்ந்தவரே! நான் விடைப் பெற்றுக் கொள்ளுகிறேன்” என்று எரிச்சலோடு கூறினான்.

“தாராளமாக” என்று கூறிவிட்டுத் தன் குதிரையைத் தட்டிவிட்ட டுன்டுஷ், வழியில் பழங்கந்தைகளுக்குள்ளே நெளிந்து கொண்டு பிச்சை கேட்டுக் கொண்டிருந்த பிச்சைக்காரன் அருகில் நின்று, அவன் பாத்திரத்தில் ஒரு நாணயத்தைப் போட்டான்.

“பழுப்புநிற உடையணிந்த அந்த இளைஞனைப் பின்பற்றிச் செல். அவன் என்ன செய்கிறான் என்பதையும் எங்கு தங்குகிறான் என்பதையும் கண்டு அறிந்து வந்து எனக்குச் சொல்” என்று வேறு யாருக்கும் கேட்காமல், பிச்சைக்காரன் காதில் மட்டும் படும்படியாக மெல்லிய குரலில் கூறினான்.

“உத்திரவு” என்று வணங்கிக் கூறிய அந்தப் பிச்சைக்காரன், அன்று கிடைத்த பெரும் வரும்படியை எண்ணிச் சந்தோஷப்பட்டான்.

உமாரோ, பல நிழல்களுக்கிடையே ஒரு நிழல்போல் அங்கிருந்து நடந்து செல்லத் தொடங்கினான். டுன்டுஷ் தன்னை அப்படி ஏளனப்படுத்தியதை நினைக்க அவனுக்குப் பொறுக்க முடியாமல் வந்தது. அவன் ஆதரிக்காவிட்டால் பிழைக்க முடியாதா என்ன? தன் கையிலே உள்ள இரண்டு நாணயங்களையும் எடுத்துப் பார்த்துக் கொண்டான். அவை உள்ள வரையிலே அவன் தனக்குத்தானே ஒரு ராஜாதான்! மேலும், முன் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று, புல்காயும்