பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அந்த மொட்டை மாடியிலே படுத்துக் கொள்ளலாம். ஏதாவது உலகச் செய்திகளை உரைத்தால் அங்குள்ளவர்கள் தாமாகவே அவனுக்கு உணவு படைக்கத் தொடங்குவார்கள். சாப்பிட்டு விட்டு மேலே படுத்துக் கொள்ளலாம். ஆனால் ரஹீம் மட்டும் அங்கேயிருந்தால்...? எந்தவிதமான கவலையும் பட்டிருக்க வேண்டாமே!

நடந்து கொண்டே வந்தவன் புத்தகக் கடை வீதி வழியாக வந்து அந்த நீருற்றின் அருகிலே நின்றான். தண்ணீர் பானையுடன் அங்கு வந்து சேர்ந்த அந்தப்பெண், குனிந்து பானையில் தண்ணீர் எடுக்க வளைந்தாள். பானையை அமிழ்த்திப் பிடித்துத் தண்ணீர் மொண்டு கொண்டிருந்தாள். அவன், பக்கத்திலேயிருந்த பாறையில் போய் உட்கார்ந்தான். அவள், அவனைக் கவனிக்கவில்லை.

“யாஸ்மி” என்று அவன் மெதுவாகக் கூப்பிட்டான்.

அந்தப் பெரிய மரத்தடியிலே இருட்டின் ஊடேயும், முக்காட்டுத் துணிக்கு ஊடேயிருந்த அவளுடைய கண்கள், அவனுடைய கண்களைச் சந்தித்தன.

நெற்றியிலே புரண்டு கொண்டிருந்த கூந்தலின் சிறு கற்றையை ஒதுக்கி விட்ட அவளுடைய மெல்லிய மூச்சு வேகமாக ஓடிக் கொண்டிருப்பது அவன் செவிகளில் தெளிவாகக் கேட்டது.

இருட்டிலே நிற்கும் அந்த யாஸ்மி, புதுமையானவள், முன்போல் சிறுமியல்ல, அழகுவந்த பருவமங்கை. பன்னீர் மணம் கமழும் ஆடைகளும், முக்காடும் அணிந்து அமைதியே உருவமாக நிற்கிறாள். அவளுடைய கையிலிருந்த பானை ஒரு பக்கமாகச் சாய்ந்து அதில் இருந்த தண்ணீர் கீழே வழிந்து கொண்டிருந்தது. இருந்தும் அவள் அசையவில்லை.

“யாஸ்மி யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று மெல்லிய குரலிலே உமார் ஆசை பொங்கக் கேட்டான்.

“முட்டாளே! பெரிய அடி முட்டாளே! நான் யாருக்காகவும் காத்திருக்கவில்லை” என்று குறும்புச் சிரிப்புடன் கூறிவிட்டுக் கையிலிருந்த பானை நழுவிக் கீழே விழுந்ததையும் கவனியாமல் ஓடினாள். பைத்தியம் பிடித்தவள் போல் ஓடினாள். ஓடி மறைந்தே போய் விட்டாள்.