பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

12. இடு காட்டின் பக்கம் பூத்துக் குலுங்கிய மணம்!

அன்று வெள்ளிக் கிழமை; சாந்தி தரும் நாள். கல்லறைகளே எங்கும் நிறைந்த அந்த இடுகாட்டை நோக்கிப் பெண்கள் கூட்டங் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். இறந்து போனவர்கள் சாந்தியடையப் பிரார்த்திப்பதற்காக அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். இடுகாடு முழுவதும், இடிந்து கிடக்கும் கல்லறைகளின் மீதுங் கூட, என்னென்னவோ மாதிரியான பூஞ்செடிகள் எப்படியோ முளைத்துப் பூப்பூத்து அந்த இடுகாடு முழுவதும் ஒரு விநோதக் கம்பளம் விரித்து வைத்தது போல் காட்சியளித்தது. ஆண்களின் கல்லறைகளின் மீது தலைப்பாகை உருவமும் பெண்களின் கல்லறைகள் மீது மலர்க் கொத்துகளின் உருவமும் பொறிக்கப் பட்டிருந்தன. அவற்றின் மீது சூரிய ஒளி பட்டுத் தகதகத்தது, மரங்களின் நிழலிலே, முக்காடிட்ட வனிதாமணிரத்தினங்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் கல்லறைகளைச் சுற்றி வட்ட வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் செம்மலர் வாயிதழ்கள் அசைந்து கொண்டிருந்தன. அதாவது பேசிக் கொண்டிருந்தன. சிறு குழந்தைகள் புற்றரையிலே தவழ்ந்து கொண்டிருந்தன. பிரார்த்திப்படைவிடப் பேசிக் கொண்டிருப்பதில் அவர்களுடைய உற்சாகம் அதிகமாயிருந்தது. சில பெரிய பெண்கள் ஒரு வட்டத்திலிருந்து ஒரு வட்டத்திற்கு மாறி மாறிப் போய்க் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் தங்களைப் பார்க்காத போது மரங்களினூடே மறைந்து போனார்கள். பெண்கள் பிரார்த்தனை செய்யும் நேரத்திலே ஆண்கள் அங்கே நுழைவது கிடையாது.

அந்தக் கூட்டத்தின் கண்களுக்குத் தப்பி வந்த யாஸ்மி, மரங்களினூடே புகுந்து ஆற்றங்கரையோரமாக வெகுதூரம் வந்து விட்டாள். கடைசியில் அலுத்துப் போய் ஒரு கற்பாறையின் மேலே கால் நீட்டியபடி உட்கார்ந்தாள். அவள் தலைக்கு மேலே புறாக்கள் வட்டமிட்டன. அந்தப் புறாக்கள் பக்கத்திலே பாதியிடிந்து கிடந்த சுவர்களையே தங்கள் இருப்பிடமாகக் கொண்டிருந்தன. அந்தச் சுவருக்கு மேலே கூரை கிடையாது. ஏனெனில் அது அந்தச் சுவருக்குள்ளே உயர்ந்து விளங்கிய பாழடைந்த கோபுரத்தின் சுற்றுச் சுவராகும். ஆற்றையும்