பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

இடுகாட்டுக்கப்பால் இருந்த வெளியையும் கண்காணித்துக் காவல் செய்வதற்காகக் கட்டப்பட்ட கோபுரம் அது. ஆனால், இப்பொழுது பல ஆண்டுகளாக நாட்டிலே அமைதியே நிலவி வருவதால், காவல் தேவையில்லையென்று கை விடப்பட்டது. கோபுரமும் ஓரளவு பாழாகி விட்டது. இப்பொழுது அந்தக் கோபுரத்திலே புறாக்கள் குடியிருக்கின்றன. உமாரைப் போல் அலைந்து திரிபவர்க்கும் சமயா சமயங்களில் அது பயன்பட்டு வந்தது. இரவில் நட்சத்திரங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு, அது உமாருக்குப் பெரிதும் பயன்பட்டு வந்தது.

உமாரும், யாஸ்மி அருகில் வந்து சேர்ந்தான். கதிரவனுக்கெதிரே புறாக்கள் வட்டமிட வட்டமிட, புறாவின் இதயம் போல வெண்மையான யாஸ்மியின் ஆசை எண்ணங்களும், சுழன்று சுழன்று எழுந்தன. இந்த மாதிரியான நேரத்தில் என்ன செய்வதென்று யோசித்தாள். தன் அக்காள் செய்தது போல, பக்கத்தில் இருந்தவன் மீது பார்வையை வீசி, அவன் தன்னை முழுமையாக மறந்து, தன்மேல் மாறாக்காதல் மயக்கங் கொள்ளும்படி ஆசை மொழிகளை அடுக்கிப்பேச எண்ணினாள். ஆனால் அவளுடைய கைகள் நடுங்கின. வார்த்தைகள் தடுமாறின. அவனோ நெடுநேரத்திற்குப் பேசாமலே உட்கார்ந்திருந்தான். அவனுடைய கண்களிலே ஒரு பசியிருந்தது.

“ஏதாவது பேசு!” என்றாள் அவள் ஆசையோடு.

“எதைப்பற்றிப் பேசுவது? யாஸ்மி” என்று முகத்தைக் கூடத் திருப்பாமல் உமார் பதில் சொன்னான்.

“நீ போருக்குப் போயிருந்தாயே, அங்கே சுல்தானைப் பார்த்தாயா? பல நகரங்களிலும் பல பெண்களைப் பார்த்திருப்பாயே? வேறு என்ன என்ன பார்த்தாய்! அவர்கள் எப்படி எல்லாம் இருந்தார்கள்? அவற்றை யெல்லாம் சொல்லு” என்றாள். அந்த நீண்ட கொரசான் வீதியும், ருஸாவும் அவன் நினைவுக்கு முன்னே தோன்றக் கண்டான்.

“அதுவா? விஷயம் ஒன்றுமில்லை, சொக்கட்டான் காய்களைப்போல அங்குமிங்கும் நாங்கள் உருட்டப்பட்டோம். கடைசியில் பெட்டிக்குள் அள்ளிப் போட்டு மூடப்பட்டவர்களாகி விட்டோம். போரைப் பற்றி யாரால் விளக்கிப் பேச முடியும்?"