பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72


யாஸ்மி, தன்னுடைய இள வயதுக் கனவையும், வெள்ளைக் குதிரையில் ஏறி வரும் இளவரசனையும், அவன் தன்னை அழைத்துச் சென்று இருக்க வைக்கும் அன்னத் தடாகமுள்ள அரண்மனையையும் நினைத்துக் கொண்டாள்.

“நீ நிசாப்பூரிலே என்ன செய்யப் போகிறாய்?”

“யாருக்குத் தெரியும்?

“நீ திரும்பவும் போய்விடப் போகிறாயா?”

உமார் தலையை “இல்லை” என்பது போல ஆட்டினான். அவனுக்கு நிசாப்பூரை விட்டுப் போகவே மனமில்லை. யாஸ்மியைத் தவிர வேறு எதையும் நினைக்கக்கூட அவனால் முடியவில்லை. யாஸ்மிதான் எவ்வளவு தூரம் மாறிவிட்டாள்? சின்னஞ்சிறு சிறுமியாக இருந்த அவள், கருத்தைக் கலைக்கக் கூடிய அழகிய வெளவன மங்கையாக மாறிவிட்டாள். இருந்தும் அவள் மாறி விடவில்லை.

கன்னத்திலே கை வைத்தபடி தூரத்திலே இடுகாட்டிலிருந்து வெளிக்கிளம்பி நகரத்தை நோக்கி நகரும் பெண்களின் சிறிய உருவங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஞானக்கண்ணாடிப் பேராசிரியரின் அன்புக்குரிய மாணவன் நீயென்றும், நீயே ஒரு பேராசிரியராகப் போகிறாயென்றும் பேசி கொள்கிறார்களே, அது உண்மைதானா?”

உமார் இதைக் கேட்டு ஆச்சரியப்படவில்லை. பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட இந்த வதந்தி, அந்தத் தெருவில் உள்ள புத்தகக் கடைக்காரர்களிடமெல்லாம் பரவிவிட்டது. அதையே யாஸ்மியும் கேள்விப்பட்டிருக்கிறாள். புன்சிரிப்புடன் அவன் சொன்னான்.

“எனக்கு வேலை செய்வதற்கு ஓர் இடமும் கிடைக்கவில்லை; என்னை ஆதரித்துக் காப்பாற்றுவதற்கு யாரும் இல்லை; எனக்குச் சொந்தமாக எதுவுமே இல்லை. ஆசிரியருக்கு அவர் தொழில் பிழைப்பைத் தருகிறது. மதவாதிக்கு அவனுடைய சூழ்ச்சிகள் வாழ்வைத் தருகிறது. எனக்கு என்ன இருக்கிறது?"