பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

யாஸ்மி மகிழ்ச்சியுடன் நெருங்கி வந்து நின்று கொண்டாள். உமார் உண்மையாகவே பிச்சைக்காரனாகவே இருந்தாலும் நல்லதுதான். தன்னிடமிருந்து பிரிந்து போகமாட்டான் அல்லவா? அந்த அளவிற்கு அது நல்லது தான் “உனக்கு புத்தியே இல்லை. சோதிடம் சொல்லும் அகமதை விட நீ பெரிய முட்டாள்தான்! அவன் நட்சத்திரங்களைப் பார்த்துக் குறி சொல்வதற்காக நிறையப் பணம் பெறுகிறான். அவனுக்கு ஒரு கருப்பு அடிமையும் பட்டுச் சால்வையும் கூடக் கிடைத்தன. உனக்கு என்ன கிடைத்தன? அதோ பார்! கூட்டம் முழுவதும் கலைந்து விட்டது. பெண்களின் கடைசிக் கும்பல் கூடப் புறப்படத் தொடங்கி விட்டது. நான் போக வேண்டும்” என்றாள் யாஸ்மி.

யாஸ்மியின் பசுமை பொருந்திய கையை உமார் பிடித்துக் கொண்டான். இறுகிய அந்தப் பிடியிலிருந்து அவளுக்கு எழுந்து செல்ல மனம் வரவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தாள். வானத்திலே வட்டமிட்டுக் கொண்டிருந்த புறாக்கள் அந்தப் பாழடைந்த காவல் கோபுரத்தில் அடைந்து விட்டன. வானம் வெறும் வெளியாகக் காட்சியளித்தது. சிறிது நேரம் சென்றதும் இருண்ட வானிலே பிறை நிலா எழுந்து தோன்றியது.

“அதோ பிறை தோன்றி விட்டது. நான் போகிறேன்” என்றாள் யாஸ்மி தீனமாக.

“அந்தப் புது நிலவின் இரு கொம்புகளுக்கும் ஊடே ஒரு நட்சத்திரமும் விரைவில் தோன்றப் போகிறது யாஸ்மி” என்றான் உமார் மெதுவாக ஆசை பொங்கும் குரலில்.

“நான் அதைப் பார்க்கப் போவதில்லை. உன்னுடைய அந்தப் பெரிய கோபுரத்திலே அடைந்து கொண்டு, நீ மட்டும் தன்னந்தனியாகப் பார்! அந்த ஒரு நட்சத்திரத்தை மட்டும் என்ன. எல்லா நட்சத்திரங்களையுமே பார்த்துக் கொண்டிரு! ஆமாம், இரவில் புதை குழிகளிலிருந்து வெளிக்கிளம்பி வரும் பிசாசுகளுக்கு நீ பயப்படுவத்தில்லையா?”

“அந்தப் பேய்கள் என்னுடைய நண்பர்கள், தெரியுமா? அளவுக் கருவிகளையும், நட்சத்திர விளக்குகளையும், கொண்டுவந்து, அவை எனக்கு நட்சத்திரங்களைப்பற்றிய எல்லா ஷயங்களையும் சொல்லித் தரும்!” என்று வேடிக்கையாக யாஸ்மியிடம் உமார் கூறினான்.