பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

ஊர்ந்து வந்து அவள் கன்னங்களைப் பிடித்துக் கொண்டன. அவளுடைய முகத்தைத் திருப்பியபடியே தன் முகத்தின் எதிரே வைத்தபடி “என்னைப் பார்!” என்றான். ஆனால், அவளுடைய கண்கள் மூடிய படியே இருந்தன. இன்னும் பயம் போகவில்லை.

வெள்ளி நிலவின் வளைவு சிறிது மங்கியது. அதன் நடுவிலே, ஒரு நட்சத்திரம் தோன்றி ஒளி விட்டது. இருண்டவானத் திரையிலே எழுதி வைத்தது போல அது தோன்றியது. உமாரின் உள்ளத்தில் ஒரு விசித்திரமான ஆசையும் உடலெங்கும் தினுசான வேதனையின் துடிப்பும் தோன்றின. துடிக்கும் அவளுடைய வாயிதழ்கள் அவனுடைய உதடுகளிலே பொருந்திய அந்தக் கணத்திலேயே அந்தப் பசி அடங்கியது. அந்த வேதனை தீர்ந்தது!

இறுக்கி அவளை அணைத்துக்கொண்டான். “போதும்! வலிக்கிறது” என்று கூறிய யாஸ்மி பெருமூச்சு விட்டாள். நட்சத்திர வெளிச்சத்திலே அவளுடைய தோள்களிலே ஒளிபட்டுத் தெறித்தது. அவன் கழுத்தைக்கட்டிப் பிடித்திருந்த அவள் கைகள் அவனுக்கருகிலே அவளுடைய உதடுகளைக் கொண்டுவந்து நிறுத்தின. அந்த அழகிய உதடுகளின் கதகதப்பும், தன் நெஞ்சோடு ஒட்டியிருந்த அவளுடைய நெஞ்சின் ஓட்டமும், கண் பார்வையிலே தோன்றிய அவளுடைய காதல் நெருப்பின் வேகமும், அவனுடைய பசியை அடக்கி விட்டன. உலகை மறந்து, ஆழ்ந்த பெருமூச்சு விட்டுக் கொண்டு ஒருவர் அணைப்பிலே மற்றொருவர் பிணைந்து நெடுநேரம் அங்கேயே அவர்கள் கிடந்தார்கள்!

இரவு தொழுகை நேரம் கழிந்து வெகுநேரத்திற்குப் பிறகு அவர்கள் நகரத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். விஷந் தோய்ந்த வாள் போன்ற பிறை மதி விளங்க, தங்கள் காலடியின் கீழே தரையிருப்பது கூடத் தெரியாமல், கனவுலகில் மிதந்து செல்பவர்களைப் போல அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். புத்தகக்கடை வீதியின் அருகிலே அந்தப் பெரிய மரத்தடியின் கீழேயுள்ள நீருற்றின் பக்கத்திலே வந்ததும், யாஸ்மி அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “என் இதயத்தில் வீற்றிருக்கும் இதயமே! உன்னை எப்படிப் பிரிந்து செல்வேன்?” என்று ஆசைப் பொங்கத் தவிப்போடு கேட்டாள்.