பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அவளுடைய காதலும் ஒன்றேதான். காதலனும் அவன் ஒருவனேதான். பிரிவின் வேதனை அவளைப் பெரிதும் வருத்தியது. கோபுரச் சுவருக்கு வான தேவதை வருவது உண்மைதான். கண்ணுக்குத் தெரியாத அந்த வான தேவதை பாழடைந்த கோபுரத்திற்கு வந்து அவளுடைய ஆத்மாவைத் தொட்டிழுத்து அவள் உடலில் உள்ள ரத்தம் முழுவதையும் உறிஞ்சிக் கொண்டு போனது உண்மைதான், என்று அவளுடைய உதடுகள் முணுமுணுத்தன!


13. குறிபார்த்த சுல்தான் கொல்லப்பட்டார்!

உமாருக்கு அசதியாக இருந்தது. எனினும் அவனால் தூங்க முடியவில்லை. எதுவும் சாப்பிடவும் அவன் விரும்பவில்லை. அந்த இரவின் மாயாஜாலத்திலேயே அவனுடைய புத்தி லயித்திருந்தது. தன் இருப்பிடத்தின் வாசலிலே சுருட்டிக் கொண்டு கிடந்த அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்து உமார் புன்னகை புரிந்தான். அந்தப் பிச்சைக்காரன் இரவு வெகு நேரத்திற்குப் பின்னும் விதிகளிலே நொண்டிக் கொண்டு திரிவதை உமார் கவனித்திருக்கிறான். சும்மா இருக்க முடியாமல் அவனுடைய கால்கள் அவனைப் பூந்தோட்டத்திற்கு இழுத்துச் சென்றன. காவற்காரர்கள் தங்கள் கைகளில் விளக்குகளுடன் அல்லாவின் பெயரால் ஒவ்வொரு மணி நேரத்தையும் கூறிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு உள்ளுணர்வு, அந்த இரவின் விசித்திரக் காட்சிகளைப் பற்றி அவனை எச்சரிக்கையாக இருக்கச் செய்தது. அவனுக்குப் பின்னாலே ஒரு நிழல் மரங்களின் ஊடே நுழைந்து செல்வதும், அந்த உருவம் அனாதைகள் படுத்துத் தூங்கும் ஒரு குளக்கரையை நோக்கி விரைவதும் போலத் தெரிந்தது. இரவின் மாயா ஜாலங்களைப் பற்றி எதுவுமே உணராமல் அந்த அனாதைகள் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கூனன் அருகிலே வெள்ளைக் கழுதையொன்று தூங்கிக் கொண்டிருந்தது. அந்தக் குளத்தின் கரையோரத்திலே ஒரு துணியை இழுத்துப் போர்த்திக் கொண்டு அந்தக் கூணன் முடங்கி கொண்டு உட்கார்ந்திருந்தான். அந்தக் கூனனையும், கழுதையையும் எங்கோ கனவில் கண்டது போல் இருந்தது உமாருக்கு.