பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

அந்தக் கரிய இருளிலே தூரத்துக்கப்பால், ரஹீமின் புதைகுழியும், அதன் அருகிலே பொருமிக் கொண்டிருக்கும் அவனுடைய வேலைக்காரனும் தோற்றமளிப்பதை உமார் கண்டான்!


14. ஆசைக்கனவுகள் யாவும் பலித்தன.

“அவள் யார் அடிமைப் பெண்ணா? திருமணமானவளா? எப்படியிருப்பாள்?’ என்று டுன்டுஷ் கேட்டான். டுன்டுஷக்கு விவரம் சொன்ன அந்தப் பிச்சைக்காரன் “இருட்டிலே எதைச் சரியாகப் பார்க்க முடிகிறது. அவனோ இளைஞன், இரவும் பகலும் தொடர்ந்து விழித்துக் கொண்டேயிருப்பான் போலிருக்கிறது. எனக்குத் தூக்கம் கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்துங்கூட, வெள்ளிக்கிழமை இரவு விடாமல் தொடர்ந்து சுற்றினேன். அந்தப் பெண்தான் வீட்டு வேலைகளைப் பார்க்கும்படி ஏவப்படுகிறாள். கடுமையான வேலைகள் எல்லாம் கூடச் செய்கிறாள். ஆனால் அடிமைப் பெண் அல்ல. கலியாணமும் இன்னும் ஆகவில்லை” என்று சொல்லிக் கொண்டு வந்தான்.

“அவள் பெயர் என்ன?”

“யாஸ்மி, அப்துல் சாயித் என்ற மீஷத் நகரத்துத் துணி வியாபாரி அந்தக் கிழட்டுப் புத்தகக் கடைக் காரனிடம், அவன் மகள் யாஸ்மியைத் தனக்கு மணம் செய்து வைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறான்!”

“அப்துல் சாயித்! ஆம், அவன் ஒரு பெரிய கூடாரமும் ஏராளமான ஒட்டகங்களும் வைத்திருக்கிறான்” என்று டுன்டுஷ் தனக்குத்தானே பேசிக் கொண்டான். அந்தப் பிச்சைக்காரன் கூலியை எதிர்பார்த்துக் காத்திருப்பதைத் தெரிந்து கொண்ட டுன்டுஷ் அவனைப் பார்த்து, “அப்படியானால், அந்தக் கூடாரம் செய்பவனின் மகன் புத்தகக் கடை வீதியை விட்டுப் போக மாட்டான். அங்கேதான் சுற்றிக் கொண்டிருப்பான். என்னிடமிருந்து செய்தி கிடைக்கும் வரை அவளைத் தொடர்ந்து கவனித்து வா. போ” என்றான்.

“செய்தி கொண்டு வருபவன் உங்களுடைய ஆள்தான் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது பிரபுவே?"