பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

"உன்னை இந்த மாதிரி காலால் உதைத்து, “கூடாரம் செய்பவன் எங்கேயிருக்கிறான்? என்று கேட்பவன் என்னுடைய ஆளென்று தெரிந்து கொள். அதுவரையிலே தூங்காமல் அவளைத் தொடர்ந்து திரி தெரிகிறதா! நீ தூங்கினால் அதைப் பார்ப்பதற்கும், உன் குறட்டையைக் கேட்பதற்கும் வேறு ஆட்களுக்குக் கண்ணும் காதும் இருக்கின்றன என்பதை மறவாதே’ என்று சொல்லிக் கைநிறைய செப்புக் காசுகளை அள்ளித் தரையிலே கொட்டினான். வீதியில் திரிந்தவர்கள் அதை அள்ளிக் கொள்ளுவதற்குள் பிச்சைக்காரன் குனிந்து புழுதியிலே கிடந்த அந்தக் காசுகளை அவசர அவரசமாகப் பொறுக்கினான். பொறுக்கும் பொழுதே வாயினால் அவற்றை எண்ணிக் கொண்டே வந்து “ஒரு வெள்ளி நாணயத்தின் அளவு மதிப்புக் கூட இல்லையே, உன்மையான உழைப்புக்குக் கிடைத்த பணம்! - பிரபுக்களின் கைப்பிடி தண்ணீர்போன்ற தாராளத்தன்மையாக இருக்கும்!” - என்று முனகி வைது கொண்டிருந்தான். இருப்பினும் டுன்டுஷக்கு அவன் மிக மிகப் பயந்தான். அவன் எந்த மனிதனிடம் வேலை செய்கிறான் என்பது அவனுக்குத் தெரியாமலிருந்தது. அந்த பெரிய மரத்தடியில் இருந்த நீருற்றுக்கு விரைந்து சென்று அங்கே உள்ள கல்லில் உட்கார்ந்து கொண்டான்.

அங்கிருந்தவாறே அவன் பள்ளிக்கூட வாசல் புறத்தில் நடந்த செயல்களைக் கவனித்துக் கொண்டிருந்தான். நீண்ட தாடியுடைய பெரிய மனிதர்கள், தங்கள் வேலைக்காரர்களுடன், அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். பூங்காவனத்தின் வேலி ஓரத்திலே, வீதியின் வழியாக குதிரைப் படைகள் போய்க் கொண்டிருந்தன. விதியின் சக்கரம் சுழலுவதால் ஏற்பட்ட விந்தை மாற்றத்தின் காரணமாகச் சிந்தனையும் பரபரப்பும் கொண்டவர்களாக நிசாப்பூர்வாசிகள் இருந்தார்கள்.

சுல்தான் இறந்ததால், நகரமக்கள் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும்பொழுது மசூதிகளில் தொழுகை நடத்துவார்கள். பிரார்த்தனையின் மத்தியிலே புதிய சுல்தானின் பெயரைச் சேர்த்துக் கொண்டார்கள்.

அழகும், இளமையும் பொருந்திய சுல்தானின் பெயர் மாலிக்ஷா, மக்கள் அவரை இளஞ்சிங்கம் என்று அழைத்து வந்தார்கள்!