பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

கொண்டிருந்தார்கள். அங்கே டுன்டுஷ் காவற்காரர்களுக்கு ஆணையிட்டபடி, இரைந்து கத்திக்கொண்டு உமாரின் கையைப் பிடித்து வெகுவேகமாகக் காவல்களைக் கடந்து அழைத்துக் கொண்டு, ஆசனங்கள் எதுவும் இல்லாத ஒரு சிறிய அறைக்குள்ளே போய்ச் சேர்ந்தான்.

“அட கடவுளே! குறிப்பிட்ட நேரம் கடந்து எவ்வளவு நேரமாகிவிட்டது. உன்னை அழைத்து வரச் சொன்னது யார் தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே, ஒரு மாதிரியாக உமாரைப் பார்த்துக்கொண்டு, “அமைச்சர் நிசாம் அல்முல்க்” என்று கூறினான் டுன்டுஷ்.

உமாருடைய நாடித்துடிப்பு அதிகமாகியது. பெரும் வியப்பாக இருந்தது. உலக அமைப்பாளர் என்ற சிறப்புப் பட்டம் பெற்ற நிசாம் அல்முல்க் அவர்கள் இறந்துபோன சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்களின் அமைச்சர். சுல்தானுடைய மகன் மாலிக்ஷாவுக்கும் அமைச்சராகத் தொடர்ந்து பணியாற்றி வருபவர். சுல்தானுடைய அதிகாரத்தின் கீழே, சர்வாதிகாரியாக விளங்குபவர் என்று கூடச் சொல்லலாம். கற்றறிந்த மேதை அறிவுப்பெருங்கடல் - அவர் ஒரு பெர்ஷியக்காரர். படை தவிர மற்றுமுள்ள அதிகாரம் அனைத்தும் தன்வசப்படுத்திக் கொண்டவர். மாணவனான தன்னை அவர் அழைக்க வேண்டிய காரணம் அவனுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.

“தாக்கின் கோட்டை வாசலில் நான் உன்னிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டேன். அது ஒரு சோதனைக்காக நடத்தியதே. நிசாம் அல்முல்க் அவர்களின் உத்திரவுப்படி உன்னைத் தொடர்ந்து கவனித்து பாதுகாவலும் செய்து வந்தேன். நீ இளைஞனாகவும் கவலையற்றவனாகவும் இருக்கிறாய். ஆனால் இந்த நேரத்தில் உன்னுடைய முடிவு ஊசலாட்டத்தில் இருக்கிறது. நிசாம் அவர்களே உன்னைச் சோதிக்கப்போகிறார்கள். ஆகையால் நீ கவனமாக இரு” என்று டுன்டுஷ் உபதேசம் செய்தான். அவன் இவ்வளவு பேசியும் உமாருக்குப் புதிர் விளங்கவில்லை. தன்னை அழைத்திருப்பது தேவையற்ற ஓர் விஷயமாகவே அவனுக்குப் பட்டது.

இப்பொழுது சுல்தானாக இருக்கும் இளஞ்சிங்கம் தன்னை, அழைத்திருந்தால் அதில் பொருள் உண்டு.