பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

ஒரு நட்சத்திரத்தைக் காண்பித்து இதுதான் வடமீன் என்றார்கள். அவர்கள் கூறியது தவறு என்ற விளக்கப் போன என்னைக் குறி கேட்டதினால் திடீரென்று என் உள்ளத்தில் தோன்றிய கற்பனையை அவர்களுடைய ஆடம்பரப் போக்கிற்குத் தகுந்தபடி நான் அளந்து விட வேண்டியதாயிற்று. அதுவே நான் கூறிய அர்த்தமில்லாத ஜோதிடம்! வேறு ஒன்றுமில்லை!”.

“அர்த்தமில்லாத சோதிடம் எப்படி மூன்று விஷயங்களிலும் பலிக்க முடியும்? போரின் முடிவும், இரண்டு பேரரசர்களின் சாவும், கற்பனை ஜோதிடத்தின் மூலம் எப்படி நிறைவேறும். நீ இதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறாய்?”

உமார் சிறிது நேரம் சிந்தித்தான். “மேன்மையுள்ள பெரியவரே; நான் எப்படி இதற்குக் காரணம் கூற முடியும் அல்லாவின் விருப்பம் இல்லாமல் எந்தவிதமான செயலும் நடப்பதில்லை. இருந்தும் இது நடந்திருக்கிறது. நான் என்ன செய்வேன்?”

உண்மை. அல்லாவின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை! ஆனால் உன்னை அவ்வாறு குறி சொல்லத் தூண்டியது எது என்பதையே நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். ரோமானியப் பேரரசர் பிறந்த தேதியும் நேரமும் உனக்குத் தெரிந்திருக்க முடியாது என்பது உண்மைதான்! அவர் பிறந்த ஜாதகத்தை நீ குறித்திருக்கவோ, சோதிடம் கணித்திருக்கவோ முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நம் சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்களுடைய ஜாதகத்தை நீ எப்படிக் கணித்தாய்?”

நிசாம் அவர்களுடைய பேச்சு உமாரை ஒரு பரிசோதனைக்குரிய உயிரற்ற பொருளாக மதித்துப் பேசுவது போலிருந்தது. சுற்றி வளைத்து தப்பித்துக் கொள்ள முடியாதபடி பேசும் அவருடைய ஆற்றலை வியந்தபடி டுன்டுஷ் வாயைப் பிளந்து கொண்டிருந்தான்.

“நான் அதைக் கணிக்கவில்லையே!” என்று உமார் அழுத்தந்திருத்தமாகக் கூறினான்.

“ஆனால் அப்படிப் பட்டவற்றைக் கணிக்கக்கூடிய ஆற்றல் உன்னிடம் இருக்கிறதல்லவா?