பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

கடைசியாக யாஸ்மியை அழைத்து வந்து இந்த வெகுமதிகளையெல்லாம் காண்பித்த போது, “ஆ! எல்லாம் மாய வித்தையாக இருக்கிறதே! இவ்வளவும் எனக்கா?” என்று யாஸ்மி பூரித்துப் போனாள்:

“அப்படியானால் நீ பெரிய மாயக்காரிதான். என் இதயத்தைக் கவர்ந்து விட்டாயே!”

யாஸ்மியின் மெல்லிய கரங்களைப் பிடித்து அவற்றிலே அவளுக்காக வாங்கிவைத்த வளையல்களை உமார் மாட்டினான். தரையில் விரிக்கப் பட்டிருந்த அந்தப் பெரிய விரிப்பையும், பட்டுப்படுதாவையும் அதிலேயிருந்த பறக்கும் நாகப்பாம்பையும் அகன்று விரிந்த தன் அழகிய கண்களால் ஆச்சரியத்துடன் யாஸ்மி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அவிழ்த்துவிட்ட கூந்தல் மார்பிலே புரண்டு கொண்டிருந்தது. உமார் தன் முரட்டுக் கைகளால், அந்த மெல்லிய கரிய மென்மையான கூந்தலை ஒதுக்கிவிட்டான். அப்படி ஒதுக்கிவிடும் போது அவனுடைய கைவிரல்கள் அவள் கழுத்தோரத்திலே நகர்ந்துவர, தொண்டையிலே துடித்துக் கொண்டிருக்கும் நாடியோட்டத்தை யுணர்ந்தன. திடுமென்று தோன்றிய இந்த இன்பமான காட்சிகளின் பாரத்தைத் தாங்க முடியாமல் அவளுடைய மனம் வேதனையடைவது போல் இருந்தது.

கூடத்திலேயிருந்த அத்தனை புத்தகங்களையும் பார்த்துவிட்டு, “இத்தனை புத்தகங்களும் நீ படிக்கிற புத்தகங்களா? நான் இல்லாத போது, இவற்றைத்தாம் படித்துக் கொண்டிருப்பாயா?” என்று கேட்டாள். அவளுக்கு அவனைப் பிரியும் போதெல்லாம் பயமாக இருந்தது. அவனைப் பிரிந்திருக்கும் போது, நீண்டு தோன்றும் காலமும், சிந்தனையில் மூழ்கி அமைதியான சூழ்நிலையில் இருக்கும் மனமும், எப்பொழுது அவனோடு என்றும் அருகில் இருக்கக்கூடிய காலம் வருமோ என்ற ஏக்கமும் எல்லாம் சேர்ந்து அவளை அப்படியொரு காலம் விரைவில் வந்து விடுமா என்று சற்று ஐயத்தோடு நினைக்கும்போது அவளுக்குப் பயமாகவே யிருந்தது! தான் அவனருகில் இல்லாத போது அவன் என்னென்ன செய்கிறான் என்பதையறிய அவளுக்கு ஆவலாயிருந்தது.