பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

எண்ணி அவள் பெருமைப் பட்டாள். பண்டைக்காலத்து ஞானிகளின் அறிவும் அவர்களின் கவிதைகளைப் படித்துப் புரிந்து கொள்ளும் சக்தியும் அந்தக் கவிதைகளைக் காட்டிலும் அதிக இனிமையுள்ள இசையுடன் அவன்பேசும் தன்மையும் எண்ண எண்ண அவளுக்குப் பெருமையாக இருந்தது. பாழடைந்து கிடந்த ஒரு கோபுரத்தை அவளுக்காக அவன் சொர்க்கமாக மாற்றியமைத்து விட்டான். ஆனால், பெருமைக்குரிய இந்த எல்லா விஷயங்களைக் காட்டிலும் அவன் சாதாரண உமாராக, அவளைக் காதலிக்கும் உமாராக இருப்பதுதான் அவளுக்கு அதிகமான பெருமையைக் கொடுத்தது. கைகளை அகலமாக விரித்தபடி அருகில் இருந்த சாய்மான நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடி, அவனைத்தன் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே, “உண்மையாகச் சொல்! நான் கொடுமைக்காரியா? உன்னை அலட்சிப் படுத்துகிறேனா?” என்று கேட்டாள்.

அவள் பார்வையால் உண்டாகிய மயக்கத்தில் குடிகாரனைப் போல், அவளைப் பிடித்துக் கொண்டு அவள் மேல் சாய்ந்தான் உமார்.

அந்தக் காதல் கோபுரத்துக்கு ஏதாவது பெயர் வைக்க வேண்டுமென்பது மிக முக்கியமாக யாஸ்மிக்குத் தோன்றியது. புதை குழிகளில் உள்ள ஆவிகளெல்லாம் அந்தக் கோபுரத்தில் வந்து கூடுவதாக நிசாப்பூரிலே மக்கள் பேசிக் கொண்டார்கள். தன் காதலன் அருகில் இருக்கும் போது எந்தவிதமான ஆவிகளுக்கும் யாஸ்மி சுண்டு விரல் முனையளவுகூடக் கவலைப்பட்வில்லை பயப்படவுமில்லை. அதற்கு ஏதாவது பெயர். நல்ல பொருத்தமான பெயர் வைக்க வேண்டுமென்பது அவளுடைய ஆவலாக இருந்தது. உமார் ஒவ்வொரு பெயராகச் சொல்லி வந்தான், அவளுக்கு ஒன்றுகூடப் பிடிக்கவில்லை.

“அருளின் இருப்பிடம்”

“சொர்க்க மகால்”

“தேவதையின் முகாம்”

இந்தப் பெயர்கள் எதுவும் யாஸ்மிக்குப் பிடிக்கவில்லை. நல்லதேவதையொன்று அங்கே இறங்கி வந்து,